கத்தோலிக்க திருச்சபை ஆன்மீகப் பணியை மட்டும் ஆற்றவில்லை. விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது! கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது.அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம். குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.
ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது. "கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை." என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். "Verhandelingen" என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது. ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.
விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? "திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்." என்று நியாயம் கற்பித்தனர். Campo Alegre விபச்சார விடுதி குறித்து Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game ) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" - அல்-குர்ஆன்
சனி, 19 ஜூன், 2010
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக