அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.
இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.
நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....
"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.
ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.
என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'
நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.
செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.
பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.
சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.
தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.
நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.
மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....
ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்.....
நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.
என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.
எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.
நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.
அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.
அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.
உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.
என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.
அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.
அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.
ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.
விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.
கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.
அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.
இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.
நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.
மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.
ரமலான் மாதம் வந்தது....
இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'
அனுமதித்தேன்.....
சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.
ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.
அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...
ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.
மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.
சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.
'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'
அவர் கூற ஆரம்பித்தார்...
'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'
'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'
'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'
'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'
என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...
'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'
'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'
என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"
பின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.
நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.
தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.
மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....
உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.
தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.
'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'
அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'
அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'
அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.
முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.
நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.
என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"
சுபானல்லாஹ்...
இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.
முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.
இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.
உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.
சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
அரபி வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.
2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)
Brother Idris Towfiq's website:
1. idristawfiq.com. link
My sincere thanks to:
1. Canadian Dawah Association.
This article translated from (not a word to word translation):
1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link
2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
thanks to : ஆஷிக் அஹமத் அ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக