வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஸ்கார்ப் அணிய அனுமதி மறுத்த டிஸ்னிலாண்ட்

கலிபோர்னியா,ஆக19:அமெரிக்காவின் புகழ் பெற்ற டிஸ்னிலான்ட் பொழுதுபோக்குப் பூங்காவில் பணியாற்றும் முஸ்லீம் பணியாளரை அவர் கட்டியிருந்த தலைக் கவச துணியை (scarf) கழற்றுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் இமேன் போல்தால்(26). மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இவர் டிஸ்னிலான்ட் உள்ளே இருக்கும் ரெஸ்டாரென்ட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரிடம், இனிமேல் வாடிக்கையாளர்கள் முன்பு தலையை துணியால் மூடியபடி பணியாற்றக் கூடாது என்று கூறிய நிர்வாகம், அத்தோடு நில்லாமல் கட்டாயப்படுத்தி அதை கழற்றவும் செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்க சம வேலைவாய்ப்பு கமிஷனில் புகார் கொடுத்துள்ளார் இமேன்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஸ்கார்ப் கட்டியபடி பணிக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த மேற்பார்வையாளர்கள், அதை கழற்றுமாறு கூறினர். நான் மறுக்கவே, இனிமேல் ஸ்கார்புடன் பணிக்கு வரக் கூடாது. மீறி வருவதாக இருந்தால் வேலை கிடையாது, வீட்டுக்குப் போய் விடலாம் என கூறி விட்டனர்.

தற்போது ரமலான் மாதம் என்பதால் நான் ஸ்கார்ப் கட்டியபடி வேலை செய்து வருகிறேன். அன்று மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு நாட்களும் கூட இதேபோலவே நடந்து கொண்டனர் மேற்பார்வையாளர்கள்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீனா காஸி கூறுகையில்,"எந்த வகையிலும் இமேனை வேலையில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இதனால்தான் தொடர்ந்து பிடிவாதமாக இவ்வாறு கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக