அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில்..நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.
முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.
அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் எழுத்து வடிவமாக எழுதி வைத்துச் சென்றார்களே; இரண்டாவதாகத் தொகுப்பதற்கு என்ன அவசியம்? என்று சந்தேகம் எழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவத்தில் பதிவு செய்தார்கள் என்றாலும், அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார்கள் என்று புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.
ஐந்து வசனங்கள் ஒரு நாள் அருளப்பட்டால் அந்த ஐந்து வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே எழுதச் சொல்வார்கள். அது தோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். அடுத்த நாள் மூன்று வசனங்கள் அருளப்பட்டால் அதை எழுதச் சொல்வார்கள்; அது தனியாக எழுதப்படும்.
எழுத்து வடிவத்தில் அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு அதனை நபித்தோழர்கள் மனனம் செய்து கொள்வார்கள். ஒவ்வொரு வசனத்திற்குப் பிறகும் அடுத்தது எது என்பதை மனனம் செய்தவர்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள்.
மனனம் செய்த தலைமுறையினர் மரணித்து விட்டால் அந்த ஏட்டிலிருந்து இந்த வரிசைப்படி தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து எழுத்து வடிவில் உள்ளதை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.
எழுதப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்த ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.
இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தினார்கள்.
தாம், மனனம் செய்ததன் அடிப்படையிலும் மற்றவர்களின் மனனத்தை அடிப்படையாகக் கொண்டும் ''இது இந்த அத்தியாயத்தைச் சேர்ந்தது; இது இந்த வசனத்திற்கு அடுத்து வரவேண்டியது; இது இந்த வசனத்திற்கு முன்னால் வைக்க வேண்டியது'' என்று வரிசைப்படுத்தினார்கள்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் வசனங்களையும் வரிசைப்படுத்தி அத்தியாயங்களை தொகுத்தார்களே தவிர, இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது, இது மூன்றாவது அத்தியாயம் என்று வரிசைப்படுத்தவில்லை.
இந்த பாதுகாக்கப்பட்ட மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களுடைய மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில்...
.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய அந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.
மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.
இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் ''இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
.
குர்ஆனுடைய அத்தியாயங்களை ''இது முதல் அத்தியாயம்; இது இரண்டாவது அத்தியாயம்; இது மூன்றாவது அத்தியாயம்'' என்று வரிசைப்படுத்துகின்ற பணியை அவர்கள் தான் செய்தார்கள்.
ஒவ்வொரு அத்தியாயமும் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டிருந்தாலும் எதை முதல் அத்தியாயமாக அமைப்பது, எதை இரண்டாவது அத்தியாயமாக அமைப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை. எது முதலில் இருந்தாலும், எது இடையில் இருந்தாலும், எது இறுதியில் இருந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதே இதற்குக் காரணம். (நூல்: புகாரி லி 4993)
உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். ''இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தி னார்கள்.
சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.
இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிரதி எடுத்தல்
.
மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படைலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப் படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.
உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் ''இஸ்தன்புல்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் ''தாஷ்கண்ட்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.
.
அத்தியாயங்களை உஸ்மான்(ரலி) தான் வரிசைப்படுத்தினார்
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களில் பைஹகீ என்ற அறிஞர் முக்கியமானவர். ஆனால் இவர் தனது கூற்றுக்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.
அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது இப்போதைய குர்ஆனில் இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்படி இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவர்களின் வரிசைக்கும் இடையே ஏராளமான மாற்றங்கள் இருந்தன.
உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆல இம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித் தோழர்கள் பல வரிசைப் படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப் படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை.
எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவது தான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.
.
சமுதாயத்தின் அங்கீகாரம்
.
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.
இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளிலேயே குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.