திங்கள், 30 மார்ச், 2009

இரண்டு கிழக்குகளுக்கும்-இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்! எப்படி?

கேள்வி: இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு - ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் - இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.

பதில்: 1. அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது.

அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனம் அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று கூறுகிறது.

'இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.'(அல் குர்ஆன் 55:17)

அருள்மறை குர்ஆனில் இரண்டு மேல்திசைகள், இரண்டு கீழ்திசைகள் என பொருள்படும் (Dual) அரபி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி வார்த்தைகள் அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று பொருள் கொள்ள வைக்கிறது.

பதில்: 2. அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இறைவன்.

சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கிறது என்பது புவியியல் அறிவு நமக்கு கற்றுத் தந்த பாடம். ஆனால் சூரியன் உதிக்கும் நிலை (Point of Sunrise) வருடம் முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும். வருடத்தின் இரண்டு நாட்களில் மாத்திரம் - அதாவது சூரியன் நில நடுக்கோட்டை கடந்து செல்லும் அந்த இரண்டு நாட்களில் மாத்திரம், சூரியன் கிழக்குத் திசையின் சரியான நிலையிலிருந்து (மத்தியில் இருந்து) உதயமாகிறது. வருடத்தின் மற்ற நாட்களில் சூரியன் உதிப்பது கிழக்குத் திசையின் சற்று வடக்கிலிருந்தோ அல்லது கிழக்குத் திசையின் சற்று தெற்கிலிருந்தோதான் உதிக்கிறது.

கோடைகாலத்தின் உச்சக்கட்டம் வரும் பொழுது (ஜுன் மாதம் 21 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது) கிழக்குத்திசைக்கு அதிகபட்ச வடக்குப் பகுதியிலும், குளிர் காலத்தின் உச்சக் கட்டம் வரும் பொழுது ( டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது) கிழக்குத் திசைக்கு அதிகபட்ச தெற்குப் பகுதியிலும் சூரியன் உதிப்பதை நாம் நேரடியாக காணலாம்.

அதேபோல சூரியன் மேற்குத் திசையில் மறையும் போதும் மேற்குத் திசையின் அதிக பட்ச வடக்குப் பகுதியிலும், மேற்குத் திசையின் அதிக பட்ச தெற்குப் பகுதியிலும் மறைவதை காணலாம். மேற்படி இயற்கையின் செயலை, சூரியன் உதிப்பதையும் - மறைவதையும் காண்பதற்கு வசதியான இடங்களில் இருந்து நாம் எளிதாக காண முடியும்.

இவ்வாறு சூரியன் வருடம் முழுவதும் கிழக்குத் திசையின் ஒரே மையத்திலிருந்து உதிக்காமல் கிழக்குத் திசைக்கு சற்று வடக்குப் பகுதியிலிருந்தும், கிழக்குத் திசைக்கு சற்று தெற்குப் பகுதியிலிருந்தும் கிழக்குத் திசையின் பல மையங்களிலிருந்து உதிப்பதையும், அதே போன்று மேற்குத் திசையின் பல மையங்களில் அடைவதையும் பார்க்கிறோம். மேற்படி செயல், குர்ஆனில் சொல்லப்பட்ட 'இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.'(அல் குர்ஆன் 55:17) என்கிற வசனத்தை உண்மை படுத்துவதை தெளிவாக உணர முடியும்.

பதில்: 3. அல்லாஹ் - இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும் இடையில் உள்ள அனைத்து மையங்களுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இடையில் உள்ள அனைத்து மையங்களுக்கும் இறைவன் அவனே.!

அரபி மொழியில் பிற மொழிகளைப் போல் அல்லாமல் - ஒருமை (Singular) இருமை (Dual) பன்மை (Plural) (இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கை - அதாவது மூன்றும், மூன்றுக்கு மேற்பட்டதும்) என மூன்று வகையாக அமைந்துள்ளன. அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனத்தில் வரும் - 'மஷ்ரிக்கைனி' மற்றும் - 'மக்ரிபைனி' என்கிற வார்த்தைகள் இருமை (Dual) பன்மையை குறிப்பதால் - மேற்படி வசனம் இரண்டு கிழக்குகளையும், இரண்டு மேற்குகளையும் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ் - ன் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'எனவே
, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.' (அல் குர்ஆன் 70:40). மேற்படி வசனத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் 'மஷ்ரிக்கி' மற்றும் 'மக்ரிபி' என்கிற அரபி வார்த்தைகளுக்கு கிழக்குத் திசைகள், மற்றும் மேற்குத் திசைகள் என்று பொருள். அதாவது மூன்று அல்லது மூன்றிக்கு மேற்பட்ட கிழக்குத் திசைகள் என்றும், மூன்றிற்கும் மேற்பட்ட மேற்குத் திசைகள் என்றும் பொருள்.

மேற்படி வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தி என்னவெனில் அல்லாஹ் - அவன் இரண்டு கிழக்கிற்கும் இடைப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும், இரண்டு மேற்கிற்கும் இடைப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும் இறைவன் என்பதுதான். தவிர இரண்டு கிழக்கிற்கும் - இரண்டு மேற்கிற்கும் இறைவனும் அவனே தான் என்பதுமாகும்.

'thanks to" -டாக்டர் ஜாக்கிர் நாய்க்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக