புதன், 29 ஏப்ரல், 2009

முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்,

நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

[ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.] Source - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர்.

ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)

நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (68:04)

காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி)

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
(
டாக்டர் ஜான்சன்)

இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (33:21)

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு)

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:01)

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். (எஸ். எச். லீடர்)

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்)

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (48:29)

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99)

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்)

இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம். (35:08)

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி)

முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52)

அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)

அவன் தான் என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (2:32)

இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!

திங்கள், 27 ஏப்ரல், 2009

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

பெண்களும், ‘நாங்கள் நவநாகரீக மங்கைகள்’ எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம் உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக் கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது மிகையாகாது.

இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ‘ஆடை அணிந்தும் அணியாதது’ போன்றவர்களாவார்கள் என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய பெண்கள் ஆடைக் குறைப்பில் ஈடுபாடுவார்கள் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறி அவர்களின் செய்கைகள் இவ்வாறு இருக்கும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தான் முஸ்லிம்கள் ‘நவநாகரீக மங்கைகள்’ என்ற பெயரில் ஆடைக் குறைப்பு செய்வதை தவிர்த்து கண்ணியமான முறையில் ஆடை அனிந்து வெளியே செல்கிறார்கள்.

இறைவன் கூறுகிறான் : -

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்(அல் குஆன் 33:59)

சனி, 25 ஏப்ரல், 2009

பின்னடைவால் பிரச்னையா?

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.

சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.

பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.

"சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக் குர்ஆன் 2: 155).

ஆனால் -

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை". (திருக் குர்ஆன் 2: 286).

எனவே கவலையை விடுங்கள்!

சோதனைகள் தற்காலிகமானவையே!

"நிச்சயமாக துன்பத்துடன் இன்பமுண்டு. மெய்யாகவே துன்பத்துடன் இன்பமுமுண்டு". (திருக் குர்ஆன் 94: 5-6).

எனவே இத்துன்பத்திலிருந்து மீண்டு விட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

"ஏன் இந்த சோதனை நமக்கு?" என்று சிந்தியுங்கள்.. இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறி விட்டோமா - என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இறைவன் கூறுகிறான்:

"நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்" (திருக் குர்ஆன் 14: 7)

இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்துவது? இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டு நடப்பது தான் அவனுக்கு நன்றி செலுத்துவது ஆகும்!

எனவே -

"ஏதாவது பாவமான காரியங்களில் ஈடுபட்டு விட்டோமா?" என்று பாருங்கள். அது வட்டியா அல்லது ஏதேனும் (இறைவன் தடுத்துள்ள) "ஹராமா" என்று பாருங்கள். ஆம் எனில் - அந்தப் பாவங்களில் இருந்து விலகிட் முயற்சி செய்யுங்கள்.

தடாலடி நடவடிக்கை வேண்டாம். ஆர அமர சிந்தித்து முடிவெடுங்கள்.

பிரச்னைகளில் இருந்து வெளியே வர இரண்டு வழிகள்: ஒன்று நேரான வழி. மற்றொன்று குறுக்கு வழி. குறுக்கு வழி இலகுவானது போல் தோன்றும். நேர் வழி "சுற்று வழி" போல் தோன்றும்.

குறுக்கு வழிகளை நாடாதீர்கள். யாரேனும் அதற்கு ஆலோசனை சொன்னால் - உடன் உங்கள் நினைவுக்கு வர வேண்டியவன் நமது ஆதி பெற்றோர் ஆதம்- ஹவ்வா (அலை) இருவருக்கும் முன்னால் வந்தானே அவன் தான்!

ஆனால், நேர் வழியில் நிலைத்திருந்தால் இறைவன் உங்களைக் கை விட்டு விடுவானா என்ன?

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்கி விடுகின்றான். (திருக் குர்ஆன் 65: 4)

அடுத்து - உங்கள் நலம் நாடும் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

"அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள். (திருக் குர்ஆன் : 42: 38)

உங்களைக் குத்திக் காட்டுபவர்கள், உங்களின் நலனில் அக்கரை சிறிதும் இல்லாத அறிவீனர்களைப் புறக்கணியுங்கள்..

"இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (திருக் குர்ஆன் 7: 199)

தேவையற்ற ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்திருந்தால் அவைகளை விற்று விட முயற்சி செய்யுங்கள். விலை உயர்ந்த காராக இருந்தால் விற்று விட்டு விலை குறைந்த கார் அல்லது மோட்டார் சைக்கிள் என்று மாறிக் கொள்ளுங்கள். இதில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை.

உங்கள் கடனை அடைப்பது குறித்து திட்டமிடுங்கள். கடன் கொடுத்தவர்களையே அணுகுங்கள். ஒத்துழைப்பு கிட்டலாம். இல்லாவிட்டால் சட்ட ஆலோசகர்களை அணுகவும்.

ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் பக்கம் செல்லாதீர்கள். சான்றாக நகைக் கடன். வட்டிக்கு வைத்து நகைக் கடன் வாங்குவதை விட அவைகளை விற்று விடுதல் மேல். பிறகு வாங்கிக் கொள்ளலாம் - இன்ஷா அல்லாஹ். கடன்களை அடைத்திட முனைப்பு காட்டுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். கடன் கொடுத்தவர் அதனை மன்னிக்காமல் இறைவன் அதனை மன்னிப்பதில்லை என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.

தேவையற்ற செலவுகளைக் குறையுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆளுக்கு ஒரு செல்ஃபோனா, அறைக்கு ஒரு தொலைக் காட்சிப் பெட்டியா - வேண்டாம்!

"அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்".(திருக் குர்ஆன் 17:26)

அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தியுங்கள்.

முதலில் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருங்கள். அவனிடம் உதவி தேடி துஆ செய்யுங்கள். ஐந்து வேளையும் நேரம் தவறாது தொழுகைக்குச் செல்லுங்கள்.

"நம்பிக்கையாளர்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான்". (திருக் குர்ஆன் 2:153)

ஏற்கனவே நீங்கள் செய்த வேலை உங்கள் மனதுக்குப் பிடித்திருந்ததா? அவ்வாறு பிடித்திருந்தால் மட்டும் அதே துறையில் வேறு வேலை தேடுங்கள். இல்லாவிட்டால் - பொருளாதாரப் பின்னடைவே உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருப்பதாக எடுத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த வேறு துறைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

உங்களை நீங்களே எடை போடவும் இந்த தருணம் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. உங்களின் பலம் எது, பலவீனங்கள் என்னென்ன என்பதை சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் வேலை செய்து கொண்டிருந்த துறை சாராத உங்கள் பலங்களைக் கண்டுணர இதுவே வாய்ப்பு. அது போல, உங்கள் பலவீனங்களை உதறிடவும் முயற்சி செய்யுங்கள்.

வாய்ப்புகளைத் தேடிக் காத்திருங்கள். அதற்கென என்னேரமும் தயாராகக் காத்திருங்கள். தயார் நிலையில் இருப்பவர்களே வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். நாள்தோறும் நாட்டு நடப்புகளை உலக நிகழ்வுகளை குறிப்பாக உங்கள் துறை குறித்த தகவல்களை சேகரிக்கத் தவறாதீர்கள். ("அடடா! எனக்குத் தெரியாமப் போச்சே!")

ஒரே ஒரு முனையில் மட்டும் முயற்சி செய்தால் போதாது. பல முனை முயற்சிகள் தேவைப் படலாம். அவற்றுள் ஏதாவது ஒன்று நிச்சயம் "க்ளிக்" ஆகும் - இன்ஷா அல்லாஹ்.

தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் நிராசை அடைந்து விடாதீர்கள். இது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

"அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்!" (திருக் குர்ஆன் 39:53)

அதிக கவலை உடல் நலத்தையும் கெடுக்கும். எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஒரு அறிஞர் சொன்னார்: பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது என்றால் பிறகு ஏன் கவலைப் பட வேண்டும். பிரச்னை தீராது என்றால் கவலைப் பட்டு என்ன பயன்? எனவே விடுங்கள் கவலையை!

ஆனால், இது போன்ற தருணங்களில் பெரும்பாலான மனிதர்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுகிறார்கள். தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் எரிந்து விழுந்து நல்ல மனிதர்களின் உறவுகளைக் கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே உணர்ச்சி வசப் பட வேண்டாம்.

இந்த இடத்தில் பிரச்னைகளில் சிக்கியுள்ளவர்களைச் சுற்றியிருப்பவகளுக்கும் சில ஆலோசனைகள்:

மனைவிமார்களே!

இந்த நேரத்தில் உங்கள் கணவருக்கு உற்ற துணையாக இருங்கள். கவலையுற்றிருக்கும் உங்கள் கணவரை உற்சாகப் படுத்துங்கள். அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வாறு நபியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உற்ற மனைவியாகத் திகழ்ந்தார்களோ அது போல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள். நச்சரிக்காதீர்கள்.. செலவினங்களைக் கட்டுப் படுத்தல் உங்கள் கரங்களில் தான் இருக்கிறது, புதிய

நகைகள் பிறகு செய்து கொள்ளலாம். கணவருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருப்பீர்களே, அதை எடுத்துக் கொடுத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

பெற்றோர்களே!

தைரியம் ஊட்டுங்கள் உங்கள் மகனுக்கு. அவசிய செலவுகளைத் தவிர்த்து இதர செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள் அல்லது குறைக்கப் பாருங்கள். ("தம்பி, மச்சான் வந்திருக்காக,. ரெண்டு கிலோ கறி வாங்கிட்டு வாயேன், பிரியாணி போடலாம்!")

வளர்ந்து விட்ட மகன்களே- மகள்களே - உங்களைத்தான்!

உங்கள் தந்தை வசதிக்குத் தகுந்தவாறு பாக்கெட்-மணி தந்திருப்பார்கள். ஒரே ஒரு விடுமுறை நாளைக் கழிப்பதற்காக தம் செல்லச் செல்வங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கும் தந்தைமார்களும் உண்டு. இப்போது உங்கள் தந்தை விழி பிதுங்கிய நிலையில். நீங்கள் என்ன செய்யலாம்? பாக்கெட் மணி வேண்டாம். அவராகக் கொடுத்தாலும் மறுத்து விடுங்களேன். உங்கள் பாசம் அவர் கவலை போக்கும்

மறுந்தாக அமைந்திடும்.

உறவினர்களே!

உங்களைப் பற்றித் தான் பயமாக இருக்கிறது. குத்திக் காட்டுபவர்கள், உள்ளூர மகிழ்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் நீங்களாகத் தான் இருக்கிறீர்கள். ஒரு உறவினர்: "அண்ணே! ச்சீப்பா வந்ததுண்ணேன், ஒரு நாலு மனைக்கட்டு (Plots) வாங்கிப் போடலாம்னு, இந்தப் பத்திரத்தைக் கொஞ்சம் படிச்சுப் பாத்துச் சொல்லுங்கண்ணேன்!"

பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப் பட்டிருக்கும் என்னருமைச் சகோதரர்களே! வேலையும் போய் விட்டது, சேமிப்புகளும் சுருங்கி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தானே கேட்கிறீர்கள்.

வெறுங்கையுடன் மக்காவைத் துறந்து மதீனா சென்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பாருங்கள். அங்கே அவருக்கு உதவிட முன் வந்த அன்ஸாரித் தோழரிடம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலேயே, வெறும் சாக்குப் பையுடன் கடைத்தெருவுக்கு சென்று, சிறிய அளவில் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி (வெண்ணெய் வியாபாரம் தான்!) பின்னர் - ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ளேயே மிகப்பெரிய

ஏற்றுமதியாளராகவும், இறக்குமதியாளராகவும் வெற்றி பெற்ற ஒரு வணிகராகத் திகழ்ந்தது உங்கள் சிந்தனைக் கதவுகளைத் திறந்து விடட்டும்.

இந்த வரலாற்றில் உங்களுக்கு மூன்று படிப்பினைகள் உண்டு:

1. வெறுங்கையுடன் கூட நீங்கள் உங்கள் "மறு வாழ்வைத்" துவக்கலாம். கவலை வேண்டாம்.

2. நீங்கள் பணியாற்றிய இடத்தை மாற்றிப் பாருங்கள். ஹிஜ்ரத் வெற்றி தரலாம்.

3. நீங்கள் கம்பெனி கம்பெனியாக வேலை தேடித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வியாபாரத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தக்க ஒரு துணையுடன் துணிந்து இறங்கிப் பார்க்கலாம். சிறிய அளவில் துவங்குவது நல்லது. வியாபாரத்தில் நேர்மையும், தரமும் அவசியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இங்கே வலியுறுத்துவது என்னவெனில் - இவ்வுலக வாழ்க்கை அற்பமானது என்பதனை மறந்து விட வேண்டாம். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்! மறுமைக்குக் கொஞ்சம் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.. போதும் என்ற மனம் முக்கியம்.

இக்கட்டான சூழ்நிலைகளிலும் - தர்மம் செய்யுங்கள். அது உங்களின் விதியை மாற்றிட வல்லது.

இதனைப் படிப்பவர்களுடன் சேர்ந்து நாமும் உங்களுக்காக துஆ செய்கிறோம்.

நீங்களும் துஆ செய்யுங்கள்:

"என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!" ((திருக் குர்ஆன் 17: 80)

சனி, 18 ஏப்ரல், 2009

முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன?

அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டியது நம் மீது அவசியமாகிறது. இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதையே பின்பற்றுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் மற்றும் பிரிவுகள்?

உண்மையில் இவர்கள் அனைவரும் தம்மை “முஸ்லிம்கள்” என்றே கூறிக் கொள்கின்றனர். மேலும் இவர்கள் “வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை எனவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதர்” எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அல்லாஹ் தன் திருமறையில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களை பின்பற்றுமாறு முஃமின்களுக்கு கட்டளையிட்டுள்ளான். எனவே தம்மை முஃமின் என கூறிக்கொள்ளும் ஒருவர் நபி (ஸல்) அவர்களை தமது வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி நடப்பது அவர் மீது கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:79-80)

(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (நபியே! இன்னும்) நீர் கூறும்: ‘அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்.’ ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3:31-32)

அனைத்து முஸ்லிம்களும் உண்மையில் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தால், நிச்சயமாக அவர்களின் வாழ்வு நெறிகளில் இத்தனை வேறுபாடுகள் ஏற்பட்டிருக்காது. ஆனால், முஸ்லிம்களுக்கிடையே இத்தனை வேறுபாடுகள் நிறைந்திருப்பதற்ககான ஒரே காரணம் என்னவெனில்: -

தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்வோர், அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் விட்டு விட்டு தாமாகவே பல பிரிவுகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கி அவற்றைப் பின்பற்றி நடப்பது தான்.

இவ்வாறாக சிலர் ஷியா, இஸ்மாயில், போஹ்ரா, இத்னா அஸ்ஹரிஸ் போன்ற பல பெயர்களில் தம்மை அழைக்கின்றனர். இந்தப் பெயர்களில் எதுவும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாததாகும். ஆனால் இவைகள் அனைத்தும் மனிதனின் கண்டு பிடிப்புகளே தவிர வேறில்லை. அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா, திருமறையையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்றி வாழும் இறை நம்பிக்கையாளர்களக்கு சூட்டிய பெயர் “முஸ்லிம்கள்” ஆகும். எனவே அல்லாஹ்வையும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்றி வாழும் ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் தமக்கு அல்லாஹ் சூட்டிய பெயரான “முஸ்லிம்” என்பதில் திருப்திக்கொண்டு, அந்தப் பெயரில் தம்மை அழைப்பதையே அவர் விருப்பமானதாகக் கருத வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன் தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.” (அல்குர்ஆன் 22:77-78)

அல்லாஹ் திருக்குர்ஆனில், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உம்மத்து எனவும், ஒரே சகோதரர்கள் எனவும் வழிகாட்டுகிறான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும் கூட இறை நம்மிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உம்மத்தாக ஒற்றுமையாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகே சில அறிவிலிகள் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும், சீரிய போதனைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தின் பெயரால் புதிய புதிய கொள்கைகளையும், வழிமுறைகளையும் உருவாக்கி மற்ற முஸ்லிம்களிடமிருந்து வேறுபட்டனர். இவர்கள் தாங்களாகவே பல பிரிவுகளையும், சட்ட திட்ங்களையும்,புதிய நம்பிக்கைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் உருவாக்கி, இஸ்லாத்தை விட்டு வெகு தூரம் சென்று விட்டனர். இவ்வாறு இவர்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களை விட்டுவிட்டு தாங்களாகவே உருவாக்கிய கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் இஸ்லாம் மார்க்கம் காட்டும் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டில் செல்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்: -

அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான். (அல்குர்ஆன் 45:17)

“இன்னும், நிச்யமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்’ (என்றும் கூறினோம்)

ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.

எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும். (அல்குர்ஆன் 23:52-54)

நேர்வழி காட்டும் புத்தகமாகிய அல்குர்ஆன் இன்று நம்மிடையே அல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியவாறே இருக்கிறது. மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகரிப்பான, அவர்களின் வழிகாட்டுதல்களான சுன்னத்தும் (ஹதீஸ்களும்) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இன்று நம்மிடையே இருக்கிறது. உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள், அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை உண்மையிலேயே பின்பற்றி, அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களான சுன்னத்தையும் பின்பற்றி நடப்பார்களேயானால் முஸ்லிம்களுக்கிடையே இன்று காணப்படும் இத்தனை வேறுபாடுகள் நிச்சயம் இருக்காது.

ஆனால் ஒருவர் அல்லாஹ்வின் வேதத்திற்குப் பதிலாக வேறு புத்தகங்களையோ அல்லது அவனது தூதரின் (ஸல்) வழிகாட்டுதலுக்கு (சுன்னத்திற்குப்) பதிலாக வேறு ஒருவருடைய வழிகாட்டுதல்களையோ பின்பற்றுவதற்கு முயன்றால் நிச்சயமாக அவரின் வழிமுறை உண்மையான முஸ்லிமின் வழிமுறையை விட்டும் வேறுபட்டிருக்கும்.

1). அல்லாஹ்வுடைய வேதம் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகியவற்றை பின்பற்றுவது அல்லது
2). மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை, நம்பிக்கைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவது

என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.

முதலாவது பாதையைப் பின்பற்றினால், அல்லாஹ்வின் கருணையும், அவனது மன்னிப்பும் கிட்டும். இரண்டாவது பாதையைப் பின்பற்றினால், அது தவறான வழிக்கு இழுத்துச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.

முதலாவது பாதையைப் பின்பற்றினால், நேர்வழி கிடைக்கும். இரண்டாவது பாதையைப் பின்பற்றினால், அது வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும்.

முதலாவது பாதையைப் பின்பற்றினால், அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் கிட்டும். முதலாவது அல்லாத மற்ற எந்த பாதையைப் பின்பற்றினாலும் நரக நெருப்பைத் தவிர வேறு எதுவும் கிட்டாது.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். மேற்கூறிய விளைவுகளைக் கருத்தில் கொண்டு எந்தப் பாதையைப் தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வெரு தனி மனிதனின் விருப்பத்தைப் பொறுத்தது.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: ‘இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந் (வந்து)ள்ளது;’ ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் 18:29)

அல்லாஹ்வே மிக்க ஞானம் உடையவனாகவும், வல்லமை மிக்கோனாவும் இருக்கிறான்.

புதன், 15 ஏப்ரல், 2009

இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்றுமாறு இயேசு கடவுளிடம் மன்றாடுவதாக பைபிள் கூறுகிறது. தன்னை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்ற பிரார்த்திக்குமாறு தன் சீடர்களிடமும் வேண்டிக் கொள்கிறார். இந்த பிரார்த்தனையை கடவுள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

பைபிளின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவான் 9:31)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் அல்லவா? இல்லை என்றால் இயேசு தெய்வ பக்தியுள்ளவராக இருந்து, தெய்வத்தின் சித்தத்தைச் செய்தவராக இருந்தும் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

பைபிள் குறிப்பிடும் இன்னுமொரு சம்பவம்:

இறந்து கிடந்த லாசர் என்பவரின் சகோதரி மார்த்தாள் என்ற பெண் இயேசுவிடம் கூறினாள்,

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கு இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22)

கடவுளிடம் நீர் எதைக் கேட்டாலும் உனக்குத் தருவார் என்று இயேசுவைப் பற்றி நன்கறிந்த அப்பெண் கூறுகிறாள். இயேசுவும் அதனை மறுக்கவில்லை. அப்படியெனில் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு இயேசு மனமுருகி வேண்டிய போது அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்திருக்குமா?

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26: 39)

மேற்கண்ட எபிரேயர் 5:7 வசனம் இயேசுவின் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை அவரிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியை அல்லவா கூறுகிறது? இல்லை என்று இதனை யாரேனும் மறுப்பார்களானால் “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்..” என்ற யோவான் 9:31 வசனத்தின் படி இயேசுவைப் பாவி என்று கூற வேண்டிய அபத்தமான நிலைக்கு தள்ளப்படுவர். அத்துடன் தேவ ஆவியானவரின் உந்துதலால் எழுதப்பட்டது என்று வாதிக்கப் படும் பைபிளின் வசனங்களையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இயேசுவின் பிரார்த்தனையை ஊன்றிக் கவனிக்கும் எவருக்கும் அவர் மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றவே அவ்வாறு காப்பாற்ற சக்தியுடைய கடவுளிடம் பிரார்த்தித்தார் என்பது புலப்படும். பயபக்தியுடன் கேட்ட அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளவும் பட்டது. சிலுவை மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பைபிளின் கூற்றுப் படி இவ்வாறே கருத இடமுண்டு. திரித்துவக் கொள்கைப் படி பிதாவின் விருப்பமும் புத்திரனின் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லை எனில் திரித்துவக் கொள்கையின் அடிப்படைக்கு இது முரணாக அமைகிறது.

கிறித்தவர்கள் இயேசு என்று குறிப்பிடும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் ஒரு மனிதராக இருந்தார். இஸ்ராயீல் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு நபியாக இருந்தார். அவரைக் குறித்து குர்ஆன் குறிப்பிடும் போது இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று குறிப்பிடுகிறது. அவர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாகக் கிறித்தவர்கள் நம்புகின்றனர். அது வெறும் யூகம் மட்டுமே என்று குர்ஆன் கூறுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாக பைபிள் குறிப்பிட்டாலும் அநேக இடங்களில் அதற்கு முரணான தகவலையும் தருகிறது. இத்தகைய முரண்பாடுகள் குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்துவதுடன் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்ட இறைவேதத்தின் உறுதித் தன்மையைப் பறைசாற்றுகிறது.

மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை’ கொன்று விட்டோம்’ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

பைபிள் இறைவனால் அருளப்பட்டதா?

(Article in Malayalam by: M.M. AKBAR)

ஒரு ஒரு இறைதூதர் அல்லது தீர்க்கதரிசியின் வாழ்வுடன் தொடர்புடைய மூன்று அடிப்படை விஷயங்களை இஸ்லாம் அங்கீகரிக்கிறது.

  1. அவருக்கு ஏற்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பு
  2. அவர் மொழிந்தவையும் அவரின் செயல்பாடுகளும்
  3. அவரைக் குறித்து அவரது சமகால அல்லது பிற்கால மக்கள் பதிவு செய்த குறிப்புகள்.

இதில் முதலில் கூறப்பட்டது மட்டுமே வேதம் என்ற அந்தஸ்தை அடைகிறது. வேத நூல்களில் இறைதூதருக்கு உண்டாகிய வெளிப்பாடுகள் மட்டுமே இடம் பெறும்.

இத்தகைய வெளிப்பாடுகளின் ஒவ்வொரு சொல்லும் முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்டதாக இருக்கும். அதில் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இறைதூதர் மொழிபவை முற்றிலும் இறை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது தான் என்றிருப்பினும் இறைதூதரின் மொழிகளும் வேத வரிகளும் நடையில் மாறுபட்டதாக இருக்கும். இறைதூதரின் மொழிகளைப் பொறுத்தவரை அதில் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இறைதூதரைக் குறித்து பிறர் எழுதியவற்றைப் பொறுத்த வரையில் அது ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு சரியானவை என்று அறிந்த பின்னரே உண்மை என்று கொள்ளப் படும்.

மேற்குறிப்பிடப் பட்டவற்றில் குர்ஆன் முதல் தரத்திலும் ஹதீஸ்கள் இரண்டாம் தரத்திலும் சரித்திர புத்தகங்கள் மூன்றாம் தரத்திலும் வந்து விடுகிறது.

இறை வசனங்கள் தீர்க்கதரிசிகளின் கூற்றுகள் வரலாறுகள் ஆகிய மூன்று அடிப்படையில் இருந்து பல்வேறு மனிதர்களால் தொகுக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பே பைபிள். பைபிளின் முதல் அத்தியாயமான ஆதியாகமத்தில் இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்ட வசனங்களை உதாரணத்திற்குக் கொள்வோம்.

1. வெளிப்பாடுகள்: கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. . நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம்: 12: 1)

2. தீர்க்கதரிசிகளின் கூற்றுகள்: “அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)

3. தொகுப்பாளர்களின் கூற்றுகள்: ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)

உண்மையில் பைபிள் என்பது இறைவசனங்களையும் தீர்க்கதரிசிகளின் கூற்றுக்களையும் ஆதாரமாகக் கொண்டு பிற்காலத்தில் வந்த பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலாகும். குர்ஆனின் அடிப்படையில் வேதம் என்பது இறைதூதர்களுக்கு இறைவன் அருளிய வெளிப்பாடுகளை மட்டும் கொண்டதாகும். எனவே பைபிளை ஒரு இறைவேதம் என்று சொல்வதை விட பல புத்தகங்களின் தொகுப்பு என்று சொல்வதே சரியாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கிருஸ்தவ உலகு திட்டமிட்டு மறைத்த பேருண்மை!அதிர்ச்சி தரும் உண்மைத் தகவல்!

அன்புக்குரியவர்களே!

கடந்தகாலங்களில் கிருஸ்தவப் பாதிரிகளால் ச‌ர்வதேச உலகுக்கு,திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஓர் உண்மையையே இங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றோம். அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் 18ம் அத்தியாயம் 9ம் வசனத்தில்

அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? எனக் கேட்கிறான்.

இந்த வசனத்தில் (திருக்குர்ஆன்18:9) குகையில் தங்கியவர்கள் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியோர் (சுவடிக்கு உரியவர்கள்)என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.

அந்த ஏடு”என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் “அந்த ஏடு” என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை.ஆனால் ச‌மீப‌ கால‌ங்க‌ளில் அந்த ஏடுக‌ளில் இருந்த‌ செய்திக‌ள் இப்போது அம்ப‌ல‌மாகியுள்ள‌ன‌.

சாவுக்க‌ட‌ல் சாச‌ன‌ச் சுருள்க‌ள்” என்ற‌ த‌லைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் ப‌ல‌ தட‌வை BBC யில் ஒரு ம‌ணி நேர‌த்திற்கு ஒரு நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து.அதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ செய்திக‌ள் கேட்போர் அனைவரையும் விய‌ப்பில் ஆழ்த்துவ‌தாக‌ இருந்த‌து.இந்த‌ நிக‌ழ்ச்சியின் முத‌ல் ஒளிப‌ர‌ப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌வும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து.அத‌ன் விப‌ர‌ங்க‌ள்:

1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அர‌புச் சிறுவ‌ன் காணாம‌ல் போன‌ த‌ன‌து ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்க‌ட‌லை ஒட்டிய‌ ஜோர்டான் நாட்டு ம‌லைப் ப‌குதிக‌ளில் தேடி அலைந்தான்.அந்த‌ ம‌லைப்ப‌குதி “கும்ரான் மலைப்ப‌குதி”என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌து.

ஆட்டுக்குட்டியைத் தேடிய‌ சிறுவ‌ன் அங்கிருந்த‌ குகைக்குள் பார்த்த‌ போது ம‌ண் பாண்ட‌ங்க‌ளில் சுருட்டி நிற‌ப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌ தோல் ஆவண‌ங்க‌ளைக் க‌ண்டிருக்கிறான்.அவைக‌ளில் சில‌வ‌ற்றை எடுத்து வ‌ந்து செருப்புத் தொழிலாளியான‌ த‌ன் த‌ந்தையிட‌ம் கொடுக்க‌,ம‌றுநாள் த‌ந்தையும் ம‌க‌னும் சேர்ந்து குகைக்குள் இருந்த‌ அனைத்துச் சுருள்க‌ளையும் வீட்டுக்குக் கொண்டுவ‌ந்து சேர்த்தார்க‌ள்.

அந்த‌ப் ப‌ழைய‌ தோல்க‌ளைத் த‌ம‌து செருப்புத் தொழிலுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ எண்னிய‌ அந்தச் சிறுவ‌னின் த‌ந்தை தோல்க‌ளில் ஹிப்ரு மொழியில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌ வார்த்தைக‌ளின் பொருள் புரியாம‌ல்,அதை அப்போது ஜோர்டான் ம‌ன்ன‌ர் ஆட்சியிருந்த‌ கிழ‌க்கு ஜெரூஸ‌ல‌தைச் சேர்ந்த‌ ஒரு ப‌ழைய‌ புத்த‌க‌க் க‌டைக்கார‌ரிட‌ம் காண்பித்திருக்கிறார்.

ஓர‌ள‌வு ஹிப்ரூ மொழிய‌றிந்த‌ அந்த‌க் க‌டைக்கார‌ர் அந்த‌ச் சுருள்க‌ள் ப‌ழ‌ங்கால‌ச் செய்திக‌ளை கொண்ட‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று க‌ருதி ஒரு சில‌ தீனார்க‌ளுக்கு அத்த‌னை சுருள்க‌ளையும் அந்த‌ச் செருப்புத் தொழிலாளியிட‌மிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிருத்த‌வ‌ரான‌ அந்த‌ப் புத்த‌க‌க் க‌டைக்காரர் அந்த‌ச் சுருள்க‌ளை அந்ந‌க‌ரில் இருந்த‌ கிருத்த‌வ‌ ஆல‌ய‌த்தில் ஒப்ப‌டைத்துவிட்டார்.இந்த ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் சுருள்க‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் வெளிப்ப‌ட்ட‌து. அதில் உள்ள‌ செய்திக‌ளைத் தெரிந்து கொள்வ‌த‌ற்கு யூத‌ர்க‌ளும்,முஸ்லிம்க‌ளும் ஆர்வ‌ம் காட்டின‌ர்.அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த‌ ம‌ன்ன‌ர் ஹூசைன் “அந்த‌ச் சாச‌ன‌ச் சுருள்க‌ள் முஸ்லிம்,யூத‌, கிருத்தவ‌ர்க‌ள் அட‌ங்கிய‌ ஒரு குழுவிட‌ம் பொதுவாக‌ ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டு அவை ஆராய‌ப்ப‌ட‌வேண்டுமென‌” என்று விண்ண‌ப்பித்தார்.

ஆனால் கிருத்த‌வ‌ப் பாதிரியார்க‌ள் “அது த‌னியார் சொத்து”என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க‌ ம‌றுத்துவிட்ட‌ன‌ர்.கிருத்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளுக்கும் கூட‌ அவ‌ற்றைப் ப‌டிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் அளிக்க‌ப்ப‌ட‌வில்லை.

இடைப்ப‌ட்ட‌ ஐந்தாண்டு கால‌ங்க‌ளில் ஜெரூஸ‌ல‌த்தில் இருந்த‌ பாதிரிமார்க‌ள் சில‌ குழுக்க‌ளை ஏற்ப‌டுத்தி “கும்ரான்”ம‌லைப்ப‌குதிக‌ளில் இருந்த‌ பொதுங்குக‌ளில் தேடிய‌லைந்து அங்கிருந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ள் அனைத்தையும் த‌ங்க‌ள் கைவ‌ச‌ம் கொண்டு வ‌ந்து விட்ட‌ன‌ர்.

1952 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் மாத‌ம் அனைத்துச் சுருள்க‌ளும் கிறித்த‌வ‌ப் பாதிரிமார்களி‌ட‌ம் போய்ச் சேர்ந்து விட்ட‌ன‌.ப‌தினைந்தாயிர‌ம் Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்கள் அடங்கிய செய்திகளை,ஒரு குறிப்பிட்ட பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.பல கிருத்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிபதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களை கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்கு பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேரொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் வத்திகான் சபைமுன்ன‌ணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பலங்காலச் சாசனம் அழிந்துவிடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை microfilm (நுண்ணிய படச்சுருள்)எடுத்தார்கள்.அதன் ஒரு செட் போட்டோ கொப்பிகள் அமெரிக்காவில் உள்ள “லொஸ் ஏஞ்சல்ஸ்” நகரிலிருக்கும் ஒரு நூலகத்திற்கு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1990ம் ஆண்டு அந்த நூலகத்திற்குத் தலைவராக “ஐஸ்மன்” என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார்.அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி,அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்திலிருந்து நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார்.இத்தனை காலமும் கிருத்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ்” என்னும் சிகாகோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ ஹிப்ரு மொழிப் பேராசிரிய‌ர் ஒருவ‌ரின் உத‌வியைக் கொண்டு அந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ளில் முக்கிய‌மான‌து என்று அவ‌ர் க‌ருதிய‌ 100 manuscripts (கையெழுத்துப் பிரதி)களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிருஸ்தவ உலகத்தை உலுக்கியது என்றும்,குறிப்பாக கிருஸ்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்மென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்தய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவிலை என்றும்,அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்மென்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிருஸ்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும்,வழிபாடுகளும் ஆரம்ப கிருஸ்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்த‌ச் ச‌ட‌ங்குக‌ளுக்கும் ஏசுவின் பிர‌ச்சார‌த்திற்கும்,கொள்கை கோட்பாடுக‌ளுக்கும் எந்தச் ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.அவை அனைத்தும் “ப‌வுல்”என்ப‌வ‌ரால் பிற்கால‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வை.

மொத்த‌த்தில் இப்போது ஏசுவின் பெய‌ரால் சொல்ல‌ப்ப‌டும் அனைத்துக் கிருஸ்த‌வ‌க் கொள்கைக‌ளும் பொய்யான‌வை.அவ‌ற்றை ஏசுவின் அடுத்த‌ த‌லைமுறையில் வாழ்ந்த‌ உண்மையாள‌ர்க‌ளின் வாழ்வில் காண‌முடிய‌வில்லை.

மேற்க‌ண்ட‌வாறு அறிஞ‌ர்”ஐஸ்மேன்”கூறிவ‌ரும் போது,ஒரு யூத‌ரிட‌ம் அவ‌ற்ரைப் ப‌ற்றி வாத‌ம் செய்யும் போது it confirms quran” அது குர்ஆனை உறுதிப்படுத்திகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் “மைக்கேல் வைஸ்” என்ற அறிஞரும் பேசும் போது “it confirms islam” அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார்.இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.

ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படிக் குர்ஆனையும்,இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப்பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்

ஈஸா(அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.ஆனால் கிருஸ்தவ‌ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை என‌லாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேச‌த்தை இயேசு பிரசங்கித்தார்என்று கூறப்பட்டுள்ளது.

எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத்தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப்போதுமான காரணம் இருக்கிறது.

குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பதுதான் அந்தச் சுருள்களைப் படித்த கிருஸ்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாகத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்கமாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

எனவே உலகுக்கு நேர்வழிகாட்ட வந்த இறைவேதமாகிய திருமறைக் குர்ஆனை பொய்பிப்பதிலும்,உரக்கச்சொல்லப்படவேண்டிய உண்மைகளை மறைப்பதிலும் கைதேர்ந்தவர்களே அசத்தியத்தில் வாழும் இன்றய கிருஸ்தவர்கள் என்பதனை நாம் நன்கு உணரலாம்.

நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.