திங்கள், 27 ஏப்ரல், 2009

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

பெண்களும், ‘நாங்கள் நவநாகரீக மங்கைகள்’ எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம் உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக் கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது மிகையாகாது.

இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ‘ஆடை அணிந்தும் அணியாதது’ போன்றவர்களாவார்கள் என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய பெண்கள் ஆடைக் குறைப்பில் ஈடுபாடுவார்கள் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறி அவர்களின் செய்கைகள் இவ்வாறு இருக்கும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தான் முஸ்லிம்கள் ‘நவநாகரீக மங்கைகள்’ என்ற பெயரில் ஆடைக் குறைப்பு செய்வதை தவிர்த்து கண்ணியமான முறையில் ஆடை அனிந்து வெளியே செல்கிறார்கள்.

இறைவன் கூறுகிறான் : -

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்(அல் குஆன் 33:59)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக