- ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை
திண்டுக்கல்: வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.
கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது: வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் சாதாரண மக்களை விட அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வழக்குகளை விசாரிக்கும் போது கடன்பட்டவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன். ஒரு காசுகூட வட்டியை குறைக்க மாட்டேன் என கல் நெஞ்சத்துடன் பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதிக வட்டி வாங்க கூடாது என்ற நடைமுறை சட்டத்தில் உள்ளது.
நீதிபதியாக எங்களுக்கு சில அதிகாரங்களை அரசு கொடுத்துள்ளது. அதில், நாங்கள் நியாயத்தின் அடிப்படையில் வட்டியை குறைத்து நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்க முடியும். கந்துவட்டி ஒழிப்பு தண்டனை சட்டமும் நடைமுறையில் உள்ளது. நிதி நிறுவனங்கள் தரும் அதிக வட்டியை நம்பி பெரும் பணத்தை இழந்தவர்களும் உள்ளனர். இப்படி பணத்தை இழந்தவர்களுக்கு வசூலித்து கொடுக்க தனி கோர்ட் உள்ளது.
இது தவிர, வட்டி தொல்லையில் இருந்து மக்களை காக்க நிறைய குற்றவியல் நடைமுறை சட்டங்களும் உள்ளன. இவ்வளவு சட்டங்களை தாண்டியும் வட்டி கொடுமைகள் செய்கிறது. சில மனிதர்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இறைவன் கொடுத்தாலும், மனிதர்கள் தங்களுக்கு கிடைத்ததை சமமாக பங்கிட வேண்டும். தன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கணக்கு பார்ப்பதை விட,இருப்பதை மற்றவர்களுடன் பங்கிடும் நல்ல எண்ணம் வேண்டும். செலவினங்களை கூட தர்மமாக செய்ய வேண்டும். வட்டி வாங்க வேண்டாம் என்ற இஸ்லாம் சமூகத்தின் உயர்ந்த அறிவுரையை எல்லோரும் வரவேற்கின்றனர். "கடன் வாங்கியவர்கள் திரும்ப கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, விட்டு விடு' என்ற இஸ்லாம் உபதேசம் எனக்கு மிகவும் பிடித்தது. இவ்வாறு பேசினார்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக