புதன், 23 டிசம்பர், 2009

‘கிறிஸ்துமஸ் பண்டிகை’ ஓர் இஸ்லாமிய பார்வை!

மனிதனானவன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டுடிகாண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விடயங்கள் வித்தியாசப்படுகின்றன. தனிநபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே முஸ்லீம்கள எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலில் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்கின்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். எனவே உலகில் கிடைக்கும் சந்தோஷத்தை இழந்து விடக்கூடாது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையில் முஸ்லீம்களும் பங்குகொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடைகாணத்தான் வேண்டும்.

முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஷ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து விட்டு கேள்விக்கான விடைக்க வருவோம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில்: -

‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம். அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 10:2-4)

பைபிளின் இக்கூற்றிலிருந்து நாம் விளங்கக்கூடியது என்னவென்றால்: -

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், கிறிஸ்துமஸ் மரம் நாட்டுவதும், அதை அலங்கரித்து வணங்குவதும் கிறிஸ்துவர்களின் மார்க்கத்தில் உள்ளவையன்று. கர்த்தர் விரும்பாத ஒன்று என்பதையும் நாம் அவர்களது பைபிளிலிருந்தே விளங்க முடிகின்றது. பைபிளின் போதனைக்கே கிறிஸ்தவர்கள் முரண்படுவது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அடிப்படையே இல்லாத ஒன்றின் பக்கம் தலைசாய்ப்பது தவறானதாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவதோ அல்லது அப்பண்டிகையில் கலந்து கொள்வதோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்’ என்று பைபிளும் கூறுகிறது. அதைத்தான் இஸ்லாமும் ஆணித்தரமாகக் கூறுகிறது. நமது மார்க்கமான இஸ்லாத்தில் நாம் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் புதியனவைகள் கலந்துவிடாமலும் கவனமாகவிருக்க வேண்டும். 

ஏனென்றால் அல்-குர்ஆனும் அல் ஹதீஸும் எவைகளை நமக்குப் போதிக்கின்றதோ அவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கிரியைகளாகும். அதுமட்டுமல்லாமல் ‘எவர் அந்நிய சமூகத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அந்நிய சமூகத்தவராவார்’ என்கின்ற ஹதீஸ் இங்கு நினைவு படுத்தப்பட வேண்டியதாகும். அத்தோடு நாம் எப்போதுமே எமது அகீதாவைப் பாதிக்கக் கூடிய விடயங்களில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும். எவைகள் மீது இஸ்லாத்தின் தூண்கள் நிலை பெற்றுள்ளதோ அவைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கமானது எப்போதுமே தீமைகளின் பக்கம் தலைசாய்ப்பதை விரும்பவில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மது, புகைத்தல், இசை, வீணான கேளிக்கைகள் போன்ற எத்தனையோ தீமைகள் அங்கே தலை விரித்தாடுவதை நாம் பார்க்க முடியும். அங்கு பங்கேற்கின்ற போது ஏதாவதொரு தீமையில் நாம் விழவேண்டிய சூழ்நிலை உருவாகும். நமது நன்பருக்காக என்று ஏதோ ஒன்றை நாம் செய்யப் போய் நாமேன் தீமைகளில் விழவேண்டும்?

எனவே தீமைகளை விட்டு ஒதுங்குவோம், தீமைகளுக்கு விலை போகாமல் நம் உள்ளங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.

இந்தப் கட்டுரை மூலம் கிறிஸ்தவர்களை நோகடிக்க வேண்டும் என்பது கடுகளவும் எமது நோக்கமல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு தங்களது மார்க்கத்தைத் தெளிவு படுத்துவதே எமது நோக்கமாகும் என்பதை தயவு செய்து இதனைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிதோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக