செவ்வாய், 6 செப்டம்பர், 2011

காப்பக சிறுவர்களிடம் செக்ஸ் சில்மிஷ‌ம் நடத்திய பாதிரியார்!

சிறுவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு பாதிரியாரின் காப்பகத்தை அதிகாரிகள் அதிரடியாக இழுத்து மூடினர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜோனதன் ராபின்சன். 1995ம் ஆண்டு வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயில் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் காப்பகத்தில் பாதிரியார் ஜோனதன் ராபின்சன் பல்வேறு மோசடிகள் செய்து வருவதாக இங்கிலாந்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து, அந்த அமைப்பு ராபின்சனைக் கண்காணிக்க பெங்களூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் உதவியைக் கேட்டது. ஜஸ்டிஸ் அண்ட் கேர் நிறுவனமும், கடந்த 6 மாதங்களாக ராபின்சனைக் கண்காணித்து இங்கிலாந்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு அறிக்கை அனுப்பியது. அதில், "காப்பகத்தில் சில மாணவர்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். போலியான ஆவணங்கள் தயாரித்து சிலரை இங்கிலாந்து அனுப்பி உள்ளார். ஒரு மாணவனைச் சட்டப்பூர்வமாக தத்து எடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இங்கிலாந்து அமைப்பின் இந்திய பிரதிநிதியான ராக்சுகுரன் வள்ளியூர் காவல்துறையில் பாதிரியார் ராபின்சன் மீது புகார் செய்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிரியார் ராபின்சன் மாணவர்களை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கிய போது அவர்களுடன் மாணவர்களை ஓரினசேர்க்கை உறவுக்குக் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் அதிகாரிகள் அந்தக் காப்பகத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அதை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அங்கு தங்கியிருந்த 10 மாணவிகள், 21 மாணவர்கள் நெல்லையில் உள்ள சரணாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாதிரியார் ராபின்சன் தற்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை இன்டர்போலின் (சர்வதேச காவல்துறை) உதவி மூலம் தான் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு வர முடியும். இதற்காக பிரிட்டிஷ் தூதரகத்தை அணுகி அவரைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக