புதன், 30 டிசம்பர், 2009

சத்தியபாதையை ஏற்றார் ஏபல் சேவியர்!

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

தகவல்:
அல் அராபியா.

புதன், 23 டிசம்பர், 2009

‘கிறிஸ்துமஸ் பண்டிகை’ ஓர் இஸ்லாமிய பார்வை!

மனிதனானவன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டுடிகாண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விடயங்கள் வித்தியாசப்படுகின்றன. தனிநபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே முஸ்லீம்கள எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலில் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்கின்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். எனவே உலகில் கிடைக்கும் சந்தோஷத்தை இழந்து விடக்கூடாது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையில் முஸ்லீம்களும் பங்குகொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடைகாணத்தான் வேண்டும்.

முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஷ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து விட்டு கேள்விக்கான விடைக்க வருவோம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில்: -

‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம். அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 10:2-4)

பைபிளின் இக்கூற்றிலிருந்து நாம் விளங்கக்கூடியது என்னவென்றால்: -

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், கிறிஸ்துமஸ் மரம் நாட்டுவதும், அதை அலங்கரித்து வணங்குவதும் கிறிஸ்துவர்களின் மார்க்கத்தில் உள்ளவையன்று. கர்த்தர் விரும்பாத ஒன்று என்பதையும் நாம் அவர்களது பைபிளிலிருந்தே விளங்க முடிகின்றது. பைபிளின் போதனைக்கே கிறிஸ்தவர்கள் முரண்படுவது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அடிப்படையே இல்லாத ஒன்றின் பக்கம் தலைசாய்ப்பது தவறானதாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவதோ அல்லது அப்பண்டிகையில் கலந்து கொள்வதோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்’ என்று பைபிளும் கூறுகிறது. அதைத்தான் இஸ்லாமும் ஆணித்தரமாகக் கூறுகிறது. நமது மார்க்கமான இஸ்லாத்தில் நாம் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் புதியனவைகள் கலந்துவிடாமலும் கவனமாகவிருக்க வேண்டும். 

ஏனென்றால் அல்-குர்ஆனும் அல் ஹதீஸும் எவைகளை நமக்குப் போதிக்கின்றதோ அவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கிரியைகளாகும். அதுமட்டுமல்லாமல் ‘எவர் அந்நிய சமூகத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அந்நிய சமூகத்தவராவார்’ என்கின்ற ஹதீஸ் இங்கு நினைவு படுத்தப்பட வேண்டியதாகும். அத்தோடு நாம் எப்போதுமே எமது அகீதாவைப் பாதிக்கக் கூடிய விடயங்களில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும். எவைகள் மீது இஸ்லாத்தின் தூண்கள் நிலை பெற்றுள்ளதோ அவைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கமானது எப்போதுமே தீமைகளின் பக்கம் தலைசாய்ப்பதை விரும்பவில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மது, புகைத்தல், இசை, வீணான கேளிக்கைகள் போன்ற எத்தனையோ தீமைகள் அங்கே தலை விரித்தாடுவதை நாம் பார்க்க முடியும். அங்கு பங்கேற்கின்ற போது ஏதாவதொரு தீமையில் நாம் விழவேண்டிய சூழ்நிலை உருவாகும். நமது நன்பருக்காக என்று ஏதோ ஒன்றை நாம் செய்யப் போய் நாமேன் தீமைகளில் விழவேண்டும்?

எனவே தீமைகளை விட்டு ஒதுங்குவோம், தீமைகளுக்கு விலை போகாமல் நம் உள்ளங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.

இந்தப் கட்டுரை மூலம் கிறிஸ்தவர்களை நோகடிக்க வேண்டும் என்பது கடுகளவும் எமது நோக்கமல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு தங்களது மார்க்கத்தைத் தெளிவு படுத்துவதே எமது நோக்கமாகும் என்பதை தயவு செய்து இதனைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிதோம்

செவ்வாய், 8 டிசம்பர், 2009

இஸ்லாத்தை நோக்கி.. (உமர் ராவ்)

அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய
18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.
முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள். வாழ்க்கை முறைநான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்மந்தமான கல்வியை நான் கற்றேன்.
என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது. சிலகாலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.
இஸ்லாத்துடன் பரிச்சயம்
ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை. சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர்.
சில காலம் கழிந்து அந்த பகுதி நேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன். மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன்.
வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள். இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.
அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது. இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன். எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம். இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள்.
இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை. அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன்.
ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால் இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால் ..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன்.
என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது. அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன். டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள். நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம்.இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான். ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொகுப்பு:
(ஆங்கிலத்திலிருந்து தமிழில்) : கோவை. பஷீர்
Source Url : http://www.thetruecall.com/home/modules.php?
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

திங்கள், 16 நவம்பர், 2009

இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்


இறைமறைஇன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை?

இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் - அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில் சிறந்த சான்றோர்களாய் இருந்தாலும் சரி - பதில் ஒன்று தான்.

வன்முறை, வறுமை, ஒழுக்கச் சீர்கேடுகள், போதை - இது தான் அந்தப் பதில்.

இன்று எவ்வகைச் சிக்கல்களானாலும் அவை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளன:

1. உளவியல் சார்ந்தது.

2. சமூகம் சார்ந்தது.

3. உலகளாவியது.

அதாவது, தனிமனிதனின் உள்ளம் சார்ந்த பலப் பண்புகள்தாம் இறுதியில் உலகளாவியச் சிக்கல்களாய் வெடிக்கின்றன.

அதனால்தான் திருக்குர்ஆன் 'உள்ளம்' தொடங்கி 'உலகம்' வரை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்வுகளைத் தருகின்றது.

எடுத்துக்காட்டாக, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் பழிவாங்கும் பண்பே இறுதியில் வன்முறையாக - தீவிரவாதமாக உலகைப் பாதிக்கிறது. இது போன்றுதான் இதரச் சிக்கல்களும்!

1. தீவிரவாதம்: தீர்வு என்ன?

திருக்குர்ஆன் இந்தச் சிக்கலுக்கான உளவியல் காரணங்களை முதலில் தடுக்கின்றது. அநீதி இழைத்தலும் பழிவாங்குதலும்தான் தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணங்கள். ஆகவே, திருக்குர்ஆன் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது" (குர்ஆன் 5:8).

"நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே!" (குர்ஆன் 6:15).

"திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.." (குர்ஆன் 16:90).

நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.

பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக, மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.

"..அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்" (குர்ஆன் 3:134).

"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான்" (குர்ஆன் 41:34).

இன்று பயங்கரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

"...இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது" (குர்ஆன் 2:178). இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

"எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது" (குர்ஆன் 42:41).

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.

"கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்" (குர்ஆன் 2:178).

"ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்" (குர்ஆன் 42:43).

மன்னிப்பது தான் வீரமிக்கது என்று குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கி விடும் அல்லவா?

2. வறுமை: தீர்வு என்ன?

நவநாகரீக உலகில் வறுமையா? தொலைக்காட்சிப் பெட்டியின்முன் வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் நமக்கு வறுமை பற்றிய சிந்தனையா? ஆயினும் உலகில் பெரும்பகுதி இன்று வறுமையில் வாடுகிறது என்பது உண்மை. ஏன், வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்கூட வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வறுமைக்கான காரணங்களாகத் திருக்குர்ஆன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறுகிறது:

அ) தவறான பொருள் பங்கீடு

ஆ) வட்டியும் பதுக்கலும்.

அ) செல்வம் உங்களிலுள்ள செல்வர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது (59:7).

ஆனால் இன்று வளர்ந்த நாடுகள் செல்வர்களை மேலும் செல்வர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. உலகின் 0.13 விழுக்காடு மக்கள் 25 விழுக்காடு உலக வளங்களை அனுபவிக்கின்றனர் (பார்க்க: குளோபல் இஷ்யு -2004).

ஆ. வட்டி: இன்று உலக நாடுகளின் கடன் சுமையை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்வதில் வட்டியின் பங்கு முதன்மையானதாகும். வட்டிக் கொடுமையைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்ததே.

"இறைவன் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்" (குர்ஆன் 2:215).

"மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை" (குர்ஆன் 30:39).

"உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்" (குர்ஆன் 2:188).

மேற்கூறிய வசனங்களைப் பொருளாதார விதிகளாக மனிதர்களுக்குக் குர்ஆன் வழங்குகிறது. மேலும் செல்வம் என்பது இறைவன் வழங்கிய அமானிதம் எனும் அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே இறைவன் கூறியவாறு செல்வத்தைச் செலவு செய்யப் பணிக்கிறது.

* "உங்கள் செல்வத்திலிருந்து வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பங்கு உண்டு" (குர்ஆன் 9:60).

* ஒவ்வோர் ஆண்டும் செல்வர்கள் தங்களின் செல்வத்திலிருந்து 2.5 விழுக்காடு தொகையை ஜகாத்தாக (கட்டாய அறமாக) ஏழை எளியோருக்கு வழங்க வேண்டும் என்று குர்ஆன் விதித்துள்ளது. இஸ்லாமிய நெறியின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் இதுவும் ஒன்று.

* கடன் கொடுக்கல் - வாங்கல் முறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இவ்வாறு குர்ஆன் படிப்படியாக சமுதாயத்திலிருந்து இல்லாமையைப் போக்கி விடுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதனிடம் பிறர் பொருளை அபகரித்தல் எனும் எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஒருவன் அடுத்தவனின் பொருளைத் திருடுவானேயானால் அதற்கான தண்டனையையும் குர்ஆன் கூறுகிறது:

"திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையாகும்" (குர்ஆன் 5:38).

நல்லுரை, இறையச்சம், தண்டனை ஆகிய இம்மூன்றும் சமூகத்தில் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்து விடும் என்பது திண்ணம்.

3. ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும்

இன்று புதிது புதிதாக உருவாகும் நோய்களுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் விபச்சாரமும்தான் முதன்மைக் காரணங்கள். "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்" என்று குர்ஆன் கட்டளையிடுவதுடன் "அது மானக்கேடான செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது" (17:32) என்றும் எச்சரிக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறு கூறுகிறது.

"(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்" (குர்ஆன் 24:30).

"மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்" (குர்ஆன் 24:31).

இறுதியாக, கற்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழியாகத் திருமணத்தை முன்னிறுத்துகிறது.

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்" (குர்ஆன் 24:32).

இன்று மேலை நாடுகளில், "தவறே இல்லை; இயற்கையானது" என்று விவாதிக்கப்படும் ஓரினத் திருமணங்களையும் ஓரினச் சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது (குர்ஆன் 26:165).

4. சுற்றுச் சூழல் பாதிப்பு

இந்தச் சிக்கல் இன்று உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலை (சுனாமி), புயல், வெள்ளம், வறட்சி என அனைத்திற்கும் மனிதனின் செயல்கள்தாம் காரணம். அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் மயமாக்கலும் கால நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

திருக்குர்ஆன் இது குறித்தும் கவலை தெரிவிக்கிறது. பூமியிலும் கடலிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் முன் சென்ற சமூகங்கள் அழிந்தன என எச்சரிக்கிறது.

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாகத் தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக" (குர்ஆன் 30:41).

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்:

"நான் உலகிலுள்ள அறிவாளிகளை அழைத்து குர்ஆனின் அடிப்படையிலான சமநீதிமிக்க அரசை அமைக்க எண்ணுகிறேன். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் குர்ஆன் மட்டுமே உண்மை. குர்ஆனால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.(பார்க்க: Bonaparte et I'Islam Paris, France PP 105-125)

சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்:

"முஹம்மத் அவர்களின் மார்க்கம் எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் ஐரோப்பியர் அதனை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.....முஹம்மத் அவர்களைப் போன்ற ஒரு மனிதர் இப்பூமியின் அதிகாரியாகப் பொறுப்பேற்பாரானால் புதிய உலகின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் மலரும்."(A collection of writings of some of the eminent scholars - 1935 ed P. 77)

நன்றி : மருத்துவர் ஜே. முகைதீன் (சமரசம், 16-22 பிப்ரவரி 2009).

செவ்வாய், 10 நவம்பர், 2009

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.

முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.

ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.

இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!

"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர்.

கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்

தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்

திங்கள், 2 நவம்பர், 2009

கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் தஃவா சென்டரில் இஸ்லாத்தை தழுவிய சேகர்


கர்நாடக தவ்ஹீத் ஜமாத் (KTJ) நடத்தி வரும் இஸ்லாமிய தாவா சென்டரில் கடந்த 18/10/2009 அன்று கர்நாடக மாநிலம் சேர்ந்த சகோதரர் சேகர் என்பவர் தூய இஸ்லாத்தை தமது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,

மேலும் தனது பெயரை சலீம் என்று மாற்றிக்கொண்டார். இந்த சகோதருக்கு இஸ்லாம் குறித்த அடிப்படை புத்தகங்களும் DVD களும் வழங்கப்பட்டது.

கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட இந்த சகோதருக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் பொது பெங்களூர் TNTJ நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சனி, 31 அக்டோபர், 2009

இராமநாதபுரம் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற திருப்பாலைக்குடி சரோஜாதேவி


இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியை சேர்ந்த சகோதரி:சரோஜாதேவி என்பவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆரிஃப் கான் உடன் இருந்தார்கள்.