புதன், 27 மே, 2009

பேயும் இல்லை பிசாசும் இல்லை

இறந்து போனவர்களின் ஆன்மா மறுபடியும் வரும் என்றும்

மனிதர்களைத் தீண்டும் என்றும், இவை தான் பேய் என்றும்,

பிசாசு என்றும் சில மூடர்கள் நம்புகின்றனர்;.

இந்த மூட நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு,

முதலில் இறந்தவர் ஆத்மா குறித்து இஸ்லாம் என்ன

சொல்கிறது? என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டால்,

பேய் பிசாசுகளின் பெயரால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது.

ஒருவர் மரணித்து விட்டால், மண்ணறையில் அடக்கம்

செய்யப்பட்ட பின் மலக்குகள் அவரிடம் விசாரனை நடத்துவர்.

அவர் நல்லவராக இருந்தால்- 'புது மாப்பிள்ளையைப் போல்

உறங்குவீராக" என்று கூறப்படும். அல்லாஹ் அவரை

மண்ணறையிலிருந்து எழுப்பும் நாள் வரை அவர் உறங்கிக்

கொண்டே இருப்பார். கெட்டவராக இருப்பின் மறுமை நாள்

வரை மண்ணறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டே

இருப்பார் என்பதை ஆதாரப்பூர்வமான நபி மொழிகளின் மூலம்

அறியலாம்.

உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம்

அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்.

அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்தில்

இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில்

இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ்

மறுமை நாளில் உன்னை எழுப்புகின்றவரை இதுவே (கப்ரே)

உனது தங்குமிடம்" என்று கூறப்படும். என அண்ணல் நபி

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின்உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் புகாரி)

இதிலிருந்து நல்லவர்களோ, கெட்டவர்களோ, எவருமே

மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பி வர முடியாது என்பதை

அறியலாம். இவ்வளவு தெளிவாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் அறிவித்து விட்ட பிறகு - இறந்தவர்கள் மறுபடியும்

எழுந்து வருவார்கள் என்றோ - பேய் பிசாசுகளாக

உலவுவார்கள் என்றோ நம்புவதற்கு இஸ்லாத்தில்

இடமேயில்லை.

சரி, அப்படியானால் பேய்களைப் பார்த்ததாகப் பலரும்

சொல்கிறார்களே! இதற்கு என்ன பதில்?

பேயைப் பார்த்ததாகச் சொல்பவரிடம், துருவித் துருவிக்

கேளுங்கள் இறுதியில் அவர் தாம் பார்க்கவில்லை (இருந்தால்

அல்லவா பார்ப்பதற்கு?) தமக்குத் தெரிந்த ஒருவர்

பார்த்ததாகத்தான் தம்மிடம் சொன்னார் என்பார்.

சொன்னவரைத் தேடிச் சென்று அவரிடம் விசாரித்தால் அவரும்

இதே பதிலைத்தான் சொல்வார்.

இது சங்கிலித் தொடர் போல் நீண்டுக் கொண்டே

போகும். இவ்வளவுக் கெல்லாம் யாரும் முயற்சிகள்

எடுப்பதில்லை.

பேய் பிசாசுகள் பகலில் வந்ததாகவோ, இரவில்

வெளிச்சம் உள்ள இடங்களில் இருப்பதாகவோ யாரும்

சொல்வதில்லை. இருளில் தெளிவாகத் தெரியாத எதையேனும் பார்த்து

விட்டு - ஏற்கனவே அடி மனதில் தங்கிவிட்ட பேய்க் கதைகள்

நினைவுக்கு வர - இல்லாத பேய்களுக்கு கையும் காலும்

வைத்து கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பேய்களைப் பற்றிக் கதைகளில் படித்தவைகளும்,

படங்களில் பார்த்தவைகளும் ஒன்று சேர, யாராவது

கதைவிட்டால் அதுவும் இதில் சேர, பேய்கள் இப்படித்தான்

கற்பனைகளால் உருவாக்கப்படுகின்றன.

பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கையில் பலரும் மூழ்கிக்

கிடப்பதற்குக் காரணம் - சிறு வயதிலிருந்தே அந்த நம்பிக்கை

வளர்க்கப்பட்டு விட்டதால் - வளர்ந்து பெரியவர்கள் ஆன

பிறகும் கூட மனதில் அப்படியே நிலைத்து விடுகின்றது.

எனவே பெற்றோர்கள், இனியாவது தம் குழந்தைகளின்

பிஞ்சு நெஞ்சங்களில் கோழைத் தனத்தை விதைக்காமல்,

தைரியத்தையும் துணிச்சலையும் ஊட்டவேண்டும்.

அப்போதுதான் எதிர்காலச் சமுதாயம் வீரமுள்ள

சமுதாயமாக உருவெடுக்கும்.

அச்சம் பயம் கோழைத்தனம் என்னும் பேய்களை

ஓட்டுவோம். கற்பனைப் பேய்கள் தாமாக ஓட்டமெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக