ஞாயிறு, 6 ஜூன், 2010

நாங்கள் முஸ்லிம்கள்....அவ்வளவுதான்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

சமீபத்தில் வெளியான ப்யு ஆய்வறிக்கையில் (PEW REPORT) நான் கண்ட ஒரு சுவாரசியமான தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்....

முதலில் ப்யு ஆய்வறிக்கையைப் பற்றி சில தகவல்கள்...

இந்த அறிக்கை அக்டோபர், 2009ல் வெளியானது. உலக முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது. பெரும்பாலான ஊடகங்களால் நம்பத்தகுந்த அறிக்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கி இருப்பதாக அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களின் மக்கட்தொகை 157 (1.57 பில்லியன்) கோடி என்றும், இது உலக மக்கட்தொகையில் 23% எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் நால்வரில் ஒருவர் முஸ்லிம்.

இதற்கு முன் நாம் அறிந்திருந்த தகவலின் படி, உலகில் 19% முஸ்லிம்கள். ஆக, ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருந்த நிலை போய் இப்போது நான்கில் ஒருவர் முஸ்லிம்.


இந்த அறிக்கையின் சிறு பகுதியை பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. நீங்களும் படித்திருக்கலாம்.

முன்பு நான் குறிப்பிட்ட அந்த சுவாரசியமான தகவல் ஷியா-சன்னி முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது.

ப்யு அறிக்கை, உலக முஸ்லிம்களின் தொகையை துல்லியமாக தந்துள்ளதாக சொன்ன போதிலும், இந்த ஷியா-சன்னி மக்கட்தொகையை பற்றிய அவர்களது கணிப்பு துல்லியமானது அல்ல. இதை அவர்களே அந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற 157 கோடி என்ற முஸ்லிம்களின் மக்கட்தொகை சரியானது. ஆனால் அதில் 10-13% ஷியாக்கள் என்றும், 87-90% சன்னிகள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது சரியானது இல்லை.

இதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் சுவாரசியமானது, அதாவது, அவர்களால்
ஷியா-சன்னி மக்கட்தொகையை சரியாக சொல்லமுடியாததற்க்கு காரணம், கணக்கெடுப்பிற்காக முஸ்லிம்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, பலரும் "நாங்கள் முஸ்லிம்கள், அவ்வளவுதான்" என்று கூறியதே.

அதாவது பலரும் தங்களை ஷியா என்றோ சன்னி என்றோ வகைப்படுத்த விரும்பவில்லை என்பதுதான்...அட...

இதைப் பற்றி, ப்யு ஆய்வறிக்கை அதன் 38 வது பக்கத்தில் கூறுவதாவது,
"முஸ்லிம்களில் பலர் தங்களை சன்னி என்றோ ஷியா என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.அதனால் நாங்கள் கொடுத்திருக்கும் ஷியா-சுன்னி தகவல் துல்லியமானது இல்லை, இதனை படிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்"
அப்புறம் எப்படி கணக்கெடுத்தார்கள்? வேறு சில முந்தைய தகவல்களை வைத்து தான். ஆனால் அந்த தகவல்களும் எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை என்றும் கூறிவிட்டார்கள். இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ப்யு அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களின் அறிக்கைப்படி ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்வது ஈரான், ஈராக், பாகிஸ்தான் மற்றும் இந்தியா.

என்ன இந்தியாவா? நான் ஆச்சரியப்பட்டேன்.

ஒருவேளை, நம்மூருக்கு வந்து, தர்காக்களுக்கு போகும் நம்மாட்களை பார்த்துவிட்டு அவர்களையும் ஷியா கணக்கில் சேர்த்து விட்டார்களோ என்னவோ...

என் வலைப்பதிவை படிப்பவர்களில் ஷியாக்கள் யாராவது இருந்தால் நான் அவர்களை கேட்டுக்கொள்வது, நன்றாக ஆராய்ந்து உங்கள் கொள்கைகளை திருத்திக்கொள்ள முன்வாருங்கள் என்பதுதான். சொல்ல வேண்டியது எங்களின் கடமை, ஏற்றுக்கொள்வது உங்கள் இஷ்டம்.


அந்த ஆய்வறிக்கையில் நான் கண்ட வேறு சில தகவல்கள்...

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு ரஷ்யா. சுமார் 1 கோடியே 64 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், அதற்கடுத்து ஜெர்மனியில் சுமார் 40 லட்சம் முஸ்லிம்களும், பிரான்சில் 35 லட்சம் முஸ்லிம்களும், பிரிட்டனில் 16 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.

தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினாவில் சுமார் 7 லட்சம் முஸ்லிம்களும், பிரேசில் நாட்டில் சுமார் 2 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். வட அமெரிக்க நாடுகளான கனடாவில் சுமார் 6.5 லட்சம் முஸ்லிம்களும், அமெரிக்காவில் 24.5 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.



உலகிலேயே ஒரு நாட்டில் முஸ்லிம்கள் வாழும் சதவிதம் அதிகமிருப்பது அப்கானிஸ்தானில் தான், இங்கு வாழக்கூடிய மக்களில் 99.7% பேர் முஸ்லிம்கள்.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இந்த அறிக்கையில் உள்ள மக்கட்தொகை கணக்கெடுப்பு, சில நாடுகளில் 2000,2001,2002 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை. மற்ற நாடுகளிலோ 2005, 2006 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை.

இந்த வருட இறுதியில், மற்றுமொரு ஆய்வறிக்கை இதே நிறுவனத்தால் வெளியாகப்போகிறது. அது, எதிர்காலத்தில் முஸ்லிம்களின் மக்கட்தொகை எப்படி இருக்கும் என்பது பற்றியது.

இந்த அறிக்கையே சிலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது, அது என்ன செய்ய போகிறதோ?

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Reference:
1. Mapping the global population - A report on the size and distribution of world's Muslim population, released by PEW research center on October,2009.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
http://ethirkkural.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக