நாத்திகத்தின் தோற்றம்
பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் நடக்கிறது. அரிசியில் மனிதனின் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட அரசியல்வாதிகள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும், மாநிலத்தின் பேராலும், மொழியின் பேராலும் மக்களுடைய உள்ளங்களில் நஞ்சைக் கலந்து மனித அமைதியைக் கெடுக்கிறார்கள். இதுவே எதார்த்த நிலை.
இதுப் போலவே கடவுள் நம்பிக்கை மனித வர்க்கத்திற்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பதால் தான், கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள், புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், அந்தக் கடவுளின் பெயரால் துணைக் கடவுள்களையும், பொய்க் கடவுள்களையும், மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு சம்பிரதாயங்களையும் இன்னும் இவைப் போல் மனித சமுதாயத்தை வழிகேட்டிலும் அழிவுப் பாதையிலும் இட்டுச் செல்லும் பல தீய செயல்களையும் நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றி வருகிறார்கள். இந்தப் படுபாதகச் செயல்ளைப் பார்த்து வயிறு எரியும் சிந்தனையாளர்கள், போதிய ஆய்வுக் குறைவால் உண்மையான அந்த ஒரிறைவனையும் மறுக்கத் துணிகிறார்கள். நாத்திகர்களின் இச்செயல் எதுப் போல் இருக்கிறது என்றால், அரசியல் என்று ஒன்று இருக்கப்போய்த் தானே அரசியலின் பெயரால், மக்களை சுரண்டிப் பிழைக்கும் அரசியல் தரகர்கள் தோன்றுகிறார்கள். எனவே அரசியலே வேண்டாம் என்று சொல்வதுப் போல் இருக்கிறது. மக்களின் உணவாக அரிசி இருக்கப் போய்த் தானே மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அரசியில் கல்லைக் கலக்கிறார்கள்; எனவே மக்கள் அரிசியை உணவாகக் கொள்ளக் கூடாது என்று சொல்வதுப் போல் இருக்கிறது.
அரசியலில் அயோக்கியர்கள் நுழைவதைத் தடுப்பதற்கு திறமையில்லாதவர்கள், அரசியலில் கல்லைக் கலக்கும் அயோக்கியர்களை ஒழித்துக் கட்ட வகைத் தெரியாதவர்கள் அரசியலே வேண்டாம்; அரிசியே வேண்டாம் என்று பிதற்றுவதுப் போன்ற ஒரு பிதற்றலைத் தான் ஒரேக் கடவுளைப் பற்றி நாத்திகர்கள் பிதற்றுகிறார்கள். கடவுளின் பெயரால் புரோகித அயோக்கியர்கள் புரிந்து வரும் அயோக்கியத்தனங்களை ஒழித்துக்கட்ட வழித்தெரியாத நாத்திகர்கள், படைத்த அந்த இணை, துணை இல்லாத ஒரே இறைவனை ஒழித்துக் கட்ட முற்படுகிறார்கள்.
அரிசியை உணவாகக் கொள்வதைத் தடுப்பது எப்படி சாத்தியமில்லையோ அதேப் போல் அகில உலகங்களையும் படைத்து, அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து மனிதனையும் படைத்து, உணவளித்து நிர்வகித்து வரும் இணை துணை இல்லாத அந்த ஏகன்-ஒரே இறைவனையும் இல்லை என்று ஒரு போதும் நிலைநாட்ட முடியாது; அதுமட்டுமல்ல நாத்திகர்களின் இந்தத் தவறான எண்ணத்தால், முயற்சியால் மனிதக் கற்பனையில் உருவான எண்ணற்றப் பொய் கடவுள்களையும், அந்தக் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வரும் புரோகிதர்களையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. காரணம் சத்தியத்தால் அசத்தியத்தை ஒழித்துக் கட்ட வாய்ப்பு உண்டு. ஆனால் அசத்தியத்தால் சத்தியத்தை ஒழித்துக் கட்ட முடியாது. பெரியாரின் கொள்கைகளையேப் பின்பற்றுகிறோம் என்று மேடையில் முழக்கமிடுவோரின் செயல்பாடுகளே இதற்கு போதிய ஆதாரமாகும்.
ஆரம்பத்தில் ஒரே இறைவன் தான்-ஒரேக் கடவுள் தான். அவன் படைத்து ஒரே மனித சமுதாயம் தான். இதை தான் தமிழக அறிவுசால் முன்னோர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று மக்களுக்கு உணர்த்தினார்கள். ஆனால் மனிதவர்க்கத்தினருக்குப் போட்டியான படைப்பி(ஜின்)லுள்ள ஷைத்தான்-ஷாத்தான் மனித இனத்தை வழிக்கெடுத்து அழிவுப் பாதையில் இட்டுச் சென்று நரகில் தள்ளுவேன் என்று சபதம் ஏற்றிருக்கிறான். அவனது வலையில் சிக்குபவர்களை நரகில் தள்ளுவேன். என்று இறைவனும் வாக்களித்திருக்கிறான்.
நாத்திகர்கள் இந்த இடத்தில் ஆழ்ந்து சிந்தித்து விளங்க வேண்டும். அவர்கள் மேடைகளில் மக்கள் மன்றத்தில் நீதி, நேர்மை, சத்தியம், உண்மை என்று முழங்கும் பல காரியங்களில் அவர்கள் பகுத்தறிவு ஏற்று ஒப்புக் கொண்டு சரிகண்டு மேடைகளில் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தப்படி அந்த நீதியை நேர்மையை சத்தியத்தை-உண்மையை தங்களின் அந்தரங்க தனிமனித வாழ்க்கையில் கடைப்பிடிக்கீறீர்களா? கடைப்பிடிக்க முடிகிறதா? என்று அவர்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பார்க்க வேண்டும். அப்போது எத்தனைக் காரியங்களில் அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்கள் என்பதை அவர்களே உணர்ந்துக் கொள்ள முடியும். அப்படியானால் அவர்கள் சரி கண்டுள்ள விஷயங்களில், அவர்களின் மனசாட்சிக்கே மாறாக அவர்களைச் செயல்பட வைக்கும் சக்தி எது? அந்தச் சக்தியைத் தான் ஷைத்தான்-சாத்தான் என்கிறோம்.
மதங்கள் அனைத்தும் மனிதர்களால், குறிப்பாக மதப்புரோகிதர்களால், அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்யப்பட்டவையே அல்லாமல் அந்த ஒரே இறைவன் கொடுத்தவை அல்ல. இறைவனால் மனிதனுக்கென்றுக் கொடுக்கப்பட்டது. தூய வாழ்க்கை நெறி-நேர்வழி-ஒரே வழி. கோணல் வழிகள்- மதங்கள் இறைவன் கொடுத்தவை அல்ல. ஆக உலகிலுள்ள இன்றைய மனித சமுதாயத்தின் 99 விழுக்காட்டினர் இந்தப் புரோகிதர்கள் பின்னால் பல கோணல் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பரிதாப நிலையை ஓரளவு சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் பார்த்து மனம் கலங்குகிறார்கள். மனித சமுதாயத்தின் பரிதாபகரமான ஏற்றத்தாழ்வு நிறைந்த சுரண்டல்கள் நிறைந்த-ஜாதிக் கொடுமைகள் நிறைந்த -மனிதனே சக மனிதனை அடிமைப்படுத்தும் நிலை மனிதனே இன்னொரு மனிதனை மனித மலத்தைத் தின்ன வைக்கும் கொடுமை இவற்றை எல்லாம் பார்த்து பதைபதைக்கிறார்கள்.
ஜோதிடம், நல்ல நேரம்-கெட்ட நேரம், எண் ஜோதிடம், வாஸ்து சாத்திரம், கிரகபலன், பெயர் மாற்றம், ரெகை சாத்திரம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் இன்னும் பலவகை ஜோசியங்கள், ராசி பலன்கள், கற்கள் ராசி, சகுனம் பார்த்தல் இத்தியாதி இத்தியாதி-மூட நம்பிக்கைகளில் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் கொடூர நிலைகளைக் கண்டும் மதங்களின் பெயரால் கர்மாதி, ததி, 3-ம்,7-ம்,40-ம் பாத்திஹா தேர், சப்ரம், கூடு, என இறந்தவர்களின் பெயரால் பொய்க் கடவுளர்களின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள், சிலை வழிபாடு, சமாதி வழிபாடு யானை, எலி, பாம்பு என பல பிராணிகளின் வழிபாடு, அறிவுக்கே பொருந்தாத கற்பனை கட்டுக் கதைகள், இன்னும் இவைப் போல் ஏட்டில் அடங்கா, எழுதி மாளாத மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் மக்கள் ஏமாற்றப்படுவதை, அவர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதை கண்டு சகிக்காத பகுத்தறிவாளர்கள், கடவுள்களின் பெயரால் தானே அறிவுக்கே பொருந்தாத இப்படிப்பட்ட அட்டூழிங்கள் அரங்கேறுகின்றன. கடவுளே இல்லை என்று சாதித்து விட்டால் இவை அனைத்தும் ஒழிந்துவிடும் என்று இவர்களாக கற்பனை செய்துக் கொண்டு ஒரெயொரு உண்மையான கடவுள் மறுப்புக் கொள்கையையும் பிரசாரம் செய்கிறார்கள்.
ஆக உண்மையான ஒரேக் கடவுளின் பெயரால் இந்தப் புரோகித வர்க்கத்தினர் எண்ணற்ற கடவுள்களை கற்பனை செய்துவிட்டதால், அந்த எண்ணற்ற பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரே கடவுள்களையும், ஒழித்துக் கட்டலாம் எனப் பகல்கனவுக் காண்கிறார்கள். பகுத்தறிவு பேசும் நுண்ணறிவு இல்லாதவர்கள். உண்மையில் இன்று உலகில் என்ன நடைபெறுகிறது என்றால், பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்கள் மக்களை ஒரு பக்கம் வழிக்கெடுக்கிறார்கள்; உண்மைக் கடவுளையும் மறுக்கும் நாத்திகர்கள் மக்களை மறுபக்கம் வழிக் கெடுக்கிறார்கள். ஆக பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்களாலும் உலகிற்கு ஆபத்து; ஒரே கடவுளை மறுக்கும் நாத்திகர்களாலும் உலகிற்கு ஆபத்து. உலகம் முழுவதும் இன்று அழிவில் மிதக்கிறது. ஆக இரு சாரரும் மனித விரோதிகளேயாவர்.
உண்மைக் கடவுளை மறுப்பதற்கு இன்னொரு நியாயமான காரணத்தையும் இந்த மதப் புரோகிதர்கள் உருவாக்கி விட்டார்கள். பெரும்பாலான மக்கள் இந்தப் புரோகிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் விஞ்ஞான வளர்ச்சி, மனித அறிவு முதிர்ச்சி காரணமாக பல உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. இவை இதுக் காலம் வரை இந்தப் புரோகிதர்களால் கற்பனையாக சொல்லப்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்து எறிவனவாக இருக்கின்றன. இதை இந்தப் புரோகிதர்களால், அவர்களின் தலைமைப் பீடங்களால் சகிக்க முடியவில்லை.
எனவே அந்த உண்மைகளை வெளிப்படுத்தும் அறிஞர்களை-விஞ்ஞானிகளைக் கொடுமைப்படுத்திக் கொல்லவும் செய்தார்கள். அறிஞர் சாக்ரட்டீஸ், கலிலியோ, இன்னும் இவர்கள் போல் பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் உண்மைகளைச் சொன்னக் காரணத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள். விஞ்ஞான ஆய்வில் கோளாறு இருந்தால் அது தவறாக இருக்கலாம். ஆனால் சரியான ஆய்வில் முறையாக கண்டுப்பிடிக்கப்படும் உண்மைகள் இறைவனுடைய கூற்றுக்கு முரணாக ஒருபோதும் இருக்காது. காரணம் இறை அறிவிப்புகள் இறைவனது சொல்; நிருபிக்கப்பட்ட விஞ்ஞானம் இறைவனது செயல்; எனவே இறைவனது சொல்லும் செயலும் ஒருபோதும் முரண்பட முடியாது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான். என்ற டார்வின் தத்துவம் ஒரு தவறான ஆய்வு-தத்துவம் என இன்று நிரூபிக்கப்பட்டது. மரபணு (TNA) ஆய்வு முலம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மூலம் வந்தவர்களே என்ற குர்ஆன் கூறும் உண்மை இன்று விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறைத்தூதர் மூஸாவுக்கு, இறைத்தூதர் ஈஸாவுக்கு அருளப்பட்ட தவ்றாத்தும், இன்ஜீரும் னிதக் கரம் பட்டு கலப்படமாகி பல மூடநம்பிக்கைகள் அவற்றுள் நுழைந்து விட்டன. அவற்றிலுள்ள உண்மையான இறை அறிவிப்புகள் ஒருபோதும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு முரண்படாது. இடையில் இந்த யூத கிறித்துவ புரோகிதர்களால் நுழைக்கப்பட்ட மனிதக் கருத்துக்கள் விஞ்ஞானத்திற்கு முரண்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த மதப்புரோகிதர்கள் இறை அறிவிப்புகளை விட மனிதக் கற்பனைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் அவையே அவர்களின் பிழைப்புக்குரிய வாழ்வு ஆதாரங்களாகும்.
இறைவனால் இறுதியாக அருளப்பட்ட அல்குர்ஆன் இன்று சுமார் 1425 ஆண்டுகளாகியும் அதன் அசல் நிலை மாறாமல் இருக்கிறது. முஸ்லிம் அல்லாத பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக ஒரேயொரு ஆதாரமாவாது அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் ஆராய்ந்தும், இறுதியில் தோல்வியையே தழுவினர். அவர்களில் சிலர் இஸ்லாத்தை நேர்வழி எனக் கண்டு அதில் இணைந்து விட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவர் மாரிஸ் புகைல் என்ற பிரெஞ்சு டாக்டர். அவர் “விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும் என்று ஒரு நூலே எழுதியுள்ளார். அதில் 19, 20ம் நூற்றாண்டுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட உண்மைகளை 6-ம் நூற்றாண்டிலேயே அல்குர்ஆன் எடுத்துரைக்கும் அர்ப்புதத்தை விளக்கியுள்ளார். அதே சமயம் பைபிளில் எண்ணற்ற முரண்பாடுகள் இருப்பதையும் கண்டறிந்தார். முறையாக பகுத்தறிபவர்களுக்கு இந்த நூல் ஒரு அறிய வழிகாட்டியாகும்.
மருத்துவர் மாரிஸ் புகைஸ் போல் பல அறிஞர்களும் மனிதகுலம் அனைத்திற்கும் நேர்வழிக்காட்டி நூல்-நெறி நூல் அல்குர்ஆனை ஆய்வு செய்து அசந்து போயிருக்கிறார்கள். ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அல்குர்ஆனில் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்து இருக்கிறது என்று நிலைநாட்டிவிட வேண்டும் என்ற வெறியோடு அல்குர்ஆனை வரிவிடாமல், ஆழ்ந்து ஆராய்ந்தவர்கள். ஆனால் அவர்களது முயற்சியில் தோல்வியுற்றனர். அவர்களில் சிலர் இஸ்லாத்தையும் அல்குர்ஆனையும் இழிவுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆய்வில் ஈடுபட்டவர்கள். அல்குர்ஆன் வெளிப்படுத்தும் விஞ்ஞான உண்மைகளைக் கண்டு, இது உண்மையில் 6-ம் நூற்றாண்டில் தனி ஒரு மனிதரோ, அல்லது ஒரு குழுவினரோ முயற்சிகள் செய்து எழுதிய நூல் அல்லவே அல்ல; இது மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியால் மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
“அல்குர்ஆன் தனி ஒரு மனிதனாலோ, ஒரு குழுவினராலோ எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், இறைவனைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு முழுக் குர்ஆன் அல்ல அதிலுள்ள ஒரு அத்தியாயம் போல் பிரிதொரு அத்தியாயத்தை எழுதிக் காட்டட்டுமே பார்க்கலாம்” என்று அல்குர்ஆன் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 1429 ஆண்டுகளாக அந்த சவாலை மனிதர்களால் முறியடிக்க முடியவில்லை. அல்குர்ஆன் அன்று மனிதனால் எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கின்றன என்று கூறுகிறவர்கள், ஒன்றில் ஆத்திரத்தோடு, வெறுப்போடு காழ்ப்புணர்வுடன் அல்குர்ஆனை ஆய்வு செய்தவர்களாக இருக்க வேண்டும்; அல்லது அவசரஅவசரமாக நுனிப்புல் மேய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே நடுநிலையோடு, ஆழ்ந்து அல்குர்ஆனை ஆராய்ந்தவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.
எனவே நாத்திக பகுத்தறிவுச் சகோதரர்கள், இருக்கும் ஒரேக் கடவுளே சுயநலப் புரோகிதர்களின் கற்பனையில் பல பொய்க் கடவுளர்களாகி அதிலிருந்து பிறந்ததுத்தான் நாத்திகவாதம் என்பதை அறிந்துக் கொள்வார்களாக. நடுநிலையோடு தங்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் கருத்துக்களை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ஆத்திரமோ அனுதாபமோ இல்லாமல், விருப்போ வெறுப்போ இல்லாமல் இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலினை ஆழ்ந்து ஆய்வு செய்தால் அற்புதமான விளக்கங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
அந்நஜாத்
நன்றி : http://www.readislam.net/portal/archives/2674