வெள்ளி, 10 ஜூலை, 2009

திருக்குர்ஆனில் சரித்திர தவறா?


திருக்குர்ஆனில் சரித்திர தவறா?

பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.

அகிலங்களின்ன இறைவனிடமிருந்து இது இறக்கப்பட்டது என்று பிரகடனம் செய்யும் ஒரே இறைநூல் திருக்குர்ஆன்! (26: 192) மானிடரும் ஜின் இனமும் ஒன்றிணைந்து முயற்சி செய்தாலும் இதற்குச் சமமான ஒரு நூலைக் கொண்டு வர இயலாது என்று அறைகூவல் விடுக்கும் ஒரே வேதம்! (2:23, 17:88) மாறுதல்களோ, முரண்பாடுகளோ தவறுகளோ அதனை நெருங்காது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்ட ஒரே வேதமும் திருக்குர்ஆன் மட்டுமே! (4:82, 15:9, 41:42)

அன்று முதல் இன்று வரை இறை மறுப்பாளர்கள் திருக்குர்ஆனை விமர்சித்து வந்த போதிலும் அவை எல்லாவற்றையும் கடந்து இன்றளவும் மேலோங்கி நிற்கும் சிகரமாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இறைவனின் அறைகூவலுக்கு எதிராக திருக்குர்ஆனைப் போன்று ஒரு நூலை உருவாக்க முயன்றவர்கள் இறுதியில் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டு இதற்கு முன் சரணடைந்ததே சரித்திரமாக உள்ளது.

அன்றைய இறை மறுப்பாளர்களைப் போன்று இன்றைய காலகட்டத்திலும் மேற்கத்திய, கீழைத்தேயத்தவரும் யூத கிறிஸ்தவ விமர்சகர்களும் திருக்குர்ஆன் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் திருக்குர்ஆனில் சரித்திர தவறுகள் உள்ளன என்பதுவாகும். குறிப்பாக சில கிறிஸ்தவர்கள் இதை ஒரு பிரச்சாரமாக ஆக்கி கிறிஸ்தவத்தை வளர்துக்கொள்ள முயன்று வருகின்றனர். திருக்குர்ஆன் மீது அவர்களால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்பதுடன் அவர்களுக்கே எதிரான ஆதாரங்களாக அவை அமைந்துள்ளன என்பதை இத்தொடரில் நாம் நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்!

திருக்குர்ஆனில் பல வரலாற்றுத் தகவல்கள் காணப்படுகின்றன. ஆதி பிதா எனப்படும் ஆதம் (அலை) அவர்கள் முதற் கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர்கள் மற்றும் சான்றோர்களைப் பற்றிய வரலாற்றத் தகவல்கள் திருக்குர்ஆனில் உள்ளன. இத்தகைய வரலாறுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு ஒரு படிப்பினையாகவே அவை தேவைக்கு ஏற்றார் போல் தேவைப்பட்ட இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறதேயன்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் போன்று காலக் கிரம வரிசைப் படி சம்பவங்களை வரிசைப் படுத்திச் சொல்லவில்லை. காரணம் திருக்குர்ஆன் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுப் புத்தகம் அல்ல. நன்மை தீமையைப் பிரித்தறிவித்து மக்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நல்லுபதேசமாகவும் அருளப்பட்ட வேதம்! திருக்குர்ஆனைப் பொறுத்த மட்டில் மக்கள் படிப்பினை பெறும் அளவுக்கு போதுமான வரலாற்று சம்பவங்கள் மிகத் தெளிவாகவும் முரண்பாடுகளின்றியும் குழப்பங்களின்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனில் வரலாற்றுச் செய்திகள் என்ன நோக்கத்திற்காக விவரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவு படுத்தும் ஏதேனும் சில வசனங்களைக் காண்க:

“நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன” (11:120)

நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்” (12:3)

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்” (40:78)

மேற்கண்ட வசனங்கள் நமக்கு தரும் செய்திகள்:

தன்னைப் போன்ற ஒரு தூதுப் பணியுடன் தனக்கு முன்னரும் இறைதூதர்கள் அனுப்பப்ட்டிருக்கின்றனர். தனக்கு ஏற்பட்டது போன்ற இன்னல்கள் அவர்களுக்கும் ஏற்பட்டது என்பதை விளக்குவதன் மூலம் இறைதூதரின் உள்ளத்தைத் திடப்படுத்தவும், இறை நம்பிக்கையாளர்கள் வரலாற்றுச் செய்திகளின் மூலம் படிப்பினையும் நல்லுபதேசமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் உள்ளம் அதனால் பண்பட வேண்டும் என்ற நோக்கிலும் தான் வரலாறுகள் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள எந்த வரலாற்றுச் செய்திகள் குறித்தும் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு அறிந்திருக்கவில்லை.

மனித சமூகத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான இறைதூதர்க்ள அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அளனவரின் வரலாறும் திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை. அவர்களில் சிலரது வரலாறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்:

பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.

திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தெழுகை தொழுகையிலும், மற்ற நேரங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் திருக்குர்ஆன் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவே பைபிளைப் போன்று ஒரு கதை சொல்லும் பாங்கில் இருந்திருந்தால் அது மிகப் பெரிய புத்தகமாகி ஓதுவதற்கும் மனனமிடுவதற்கும் கடினமாகி திருக்குர்ஆன் ஏட்டளவில் ஒதுங்கியிருக்கும். கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நடமாடும் குர்ஆன்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க. இது போன்று பைபிளை முழுக்க மனப்பாடமிட்டவர்கள் என்று உலகில் எத்தனை பேரைக் காட்ட முடியும்?

திருக்குர்ஆனில் ஒரே இறைதூதரைப் பற்றிய வரலாறுகள் பல அத்தியாயங்களில் தேவைக்கு ஏற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவை நினைவில் நிற்பதற்கு எளிதாகவும் இறைநம்பிக்கையை அதிகரிக்கவும் தோதுவாக இருக்கிறது.

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து – விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன – இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை” (39:23)

பைபிளில் இடம் பெறாத இறைதூதர்களின் வரலாறுகளும், பைபிள் குறிப்பிட்டு்ள்ள இறைதூதர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பைபிள் குறிப்பிடாத நிகழ்ச்சிகளும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இது எல்லாவற்றையும் அறிந்த இறைவனால் அருளப்பட்ட இறைநூல் என்பதற்கான சான்று ஆகும்.

பைபிள் என்பது தீர்க்கதரிசிகளின் வரலாற்றை பிற்கால எழுத்தர்களால் தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூற்களின் தொகுப்பு ஆகும். உதாரணத்திற்கு உபாகமம் 34 ஆம் அத்தியாயம் மோசேயின் வரலாறு பற்றிக்கூறும் போது மோவாப் என்ற தேசத்தில் அவர் இறந்ததாகவும் அவரது கல்லறை எங்குள்ளது என்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மோசேக்கு இறக்கப்பட்டதாக கிறிஸ்தவர்கள் கூறும் தோராவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இவ்வத்தியாயத்தில் மோசேவின் இறப்புச் செய்தியும் அவரது கல்லறையை யாரும் அறியவில்லை என்பது குறித்தும் வந்துள்ள செய்தி இது யாராலோ எழுதப்பட்டது என்பதற்கான சான்றாக உள்ளது. இது குறித்து கிறிஸ்தவ அறிஞர்களும் இதற்கு விளக்கம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஏராளமான ஆசிரியர்களைக் கொண்டு பைபிள் தொகுக்கப்பட்டிருப்பதால் அதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துள்ளன.

என்றோ நடந்து முடிந்த சம்பவங்களைக் குறித்து அதற்கு நேரடி சாட்சியம் வகித்த ஒருவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக அது குறித்து எந்தத் தகவலையும் அறிந்திராத ஒருவர் மூலமே உலகம் அதைக் கேட்டது. அதிலும் முரண்பாடுகள் எதுவுமன்றி மிகவும் நேர்த்தியான தகவல்கள்! ஒரு கதை சொல்லும் பாங்கை விட “நீர் சொல்வீராக!” “நீர் ஓதிக் காட்டுவீராக!” நாம் விளக்கிக் காட்டுகிறோம்” என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வசன நடைகளில்! அதை உலகுக்கு அறிவித்தவரோ அகிலங்களின் இறைவனிடமிருந்து எனக்கு செய்திகள் வருகின்றது என்று கூறுகிறார்! அவ்வாறு வருவதாக அவர் கூறும் செய்திகளோ அற்புதமாகவும் நேர்த்தியாகவும், முரண்பாடுகளின்றியும், தெளிவாகவும், கேட்பவரின் உள்ளங்களை சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கின்றது. தனது நாற்பது வயது வரை அவரிலிருந்து வெளிப்படாத அற்புதங்கள் வெளிப்படுகின்றன! அரைக் குறித்து பொய்யர் என்றோ மோசடிக்காரர் என்றோ எந்த குற்றச்சாட்டும் அவரது சமூகத்தில் இல்லை. மாறாக தனது சமூகத்தில் மிகவும் நல்லவராகவும் கண்ணியம் மிக்கவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்து அவர் பொய்யுரைக்கிறார் என்று எங்ஙனம் கூற இயலும்? அவர் கூறும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதல்லவா அறிவுடைமை? இத்தகைய நடுநிலையான சிந்தனையின் மூலம் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றுச் செய்திகளை ஆராய்வோமானால் எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட செய்திகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)

திருக்குர்ஆனின் சரித்திரத் தவறுகள் என எந்தெந்த செய்திகளை கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ, அதே செய்திகள் கூட பைபிளை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து திருக்குர்ஆனின் தனிச்சிறப்பையும்பும் ஒரு இறைநூலுக்கே உரிய அதன் கம்பீரத்தையும் பறைசாற்றி நிற்கிறது என்பது தான் அற்புதமான செய்தியாக உள்ளது. சரித்திரத் தவறுகள் என்ற கிறிஸ்தவர்களின் மேற்கோள்களையும் அதற்கான விளக்கங்களையும்தொடர்ந்து வரும் பதிவுகளில் காணலாம். இன்ஷா அல்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக