செவ்வாய், 21 ஜூலை, 2009

கிரகணங்களும்- இஸ்லாமியர்களும்!

சூரிய- சந்தி கிரகணங்கள் ஏற்படுவதை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். நம்மில் பலர் அதை பார்த்தவர்களும் உண்டு. கிரகணங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு பெருமகிழ்ச்சி. வானிலை ஆய்வு மையங்கள் கிரகனங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடுவது. பைனாகுளர் மூலமாகவும், வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் கவசங்கள் மூலமாகவும் பார்வையிடுவது. இவ்வாறாக கிரகணங்களை ஒரு ஜாலியாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லீம் கிரகணம் ஏற்படும்போது மற்ற நாட்களை விட அல்லாஹ்வை அதிகமதிகம் அஞ்சவேண்டிய நாட்களாகும்.
கிரகணத்தை கண்டு பயந்த நபி[ஸல்] அவர்கள்;
*சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள்.[புஹாரி எண் 1059 ]
*நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.[புஹாரி எண் 1040 ]
கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.[புஹாரி எண் 1048 ]
கிரகணத்தின் போது நபி[ஸல்] அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சுவர்க்கமும்-நரகமும்.
*இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[புஹாரி எண் 748 ]
*அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள். [புஹாரி எண் 431 ]
கிரகணங்களின் போது செய்ய வேண்டிய அமல்கள்;
தொழுகைக்கு அழைப்பு விடுத்தல்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. [புஹாரி எண் 1045 ]
ஜமாஅத்தாக தொழுகை நடத்துதல்;
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.[புஹாரி எண் 1062 ]
தொழும் முறை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். [புஹாரி எண் 1212 ]
கிரகணம் விலகும் வரை தொழுதல்;
'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்![புஹாரி எண் 1212 ]
உரை நிகழ்த்துதல்;
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார். [புஹாரி எண் 7287 ]
அன்பான முஸ்லிம்களே! கிரகணங்கள் நாம் மகிழும் விஷயமல்ல. மாறாக, அவை நமக்கு இறைவனின் எச்சரிக்கை செய்தியாகும். எனவே, கிரகணம் எப்போது ஏற்ப்பட்டாலும் அந்த நாளில் அல்லாஹ்வை தொழுது, அவனை புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடி, சுவர்க்கத்தை அடைய முயற்ச்சிப்போமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக