பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கப்பட்டது பற்றி கூறப்படுகின்றது. அவற்றிலும் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும், எதார்த்தத்திற்கு மாற்றமான செய்திகளும், விஞ்ஞானத்திற்கு முரனான செய்திகளும் மலிந்து காணப்படுகின்றது. அவற்றில் சில முரண்பாடுகள் இதோ:
முரண்பாடு 20:
முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது தாவரங்களா?
ஆதியாகமம் 1 ம் அதிகாரத்தில் மனிதர்களையும் தாவரங்களையும் படைத்தது பற்றி கூறும்பொழுது முதலில் தாவரங்களே படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும் கூறுகின்றது.
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.- ஆதியாகமம் 1:11-13
இந்த வசனங்களில் மூன்றாம் நாளிலேயே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்து மனிதன் எப்பொழுது படைக்கப்பட்டான் என்பதை பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது:
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:27-31
இந்த வசனங்களில் மிகத் தெளிவாக அறாம் நாளில் தான் மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2 ம் அதிகாரத்தில் இந்த வசனங்களுக்கு நேர் முரணான செய்தி காணப்படுவதை பாருங்கள்:
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். - ஆதியாகமம் 2:4-7
இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் படைத்தது பற்றி கூறப்படுகின்றது. ஆனால் அச்சமயம் வரை புற்பூண்டுகளோ தவாரங்களோ பூமியில் முளைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் 3ம் நாளிலே கர்த்தர் பூமியில் புற்பூண்டுகளை முளைபிக்கச் செய்ததாகவும் அதன் பின் ஆறாம் நாளில் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முதலில் படைக்கப்பட்டது எது? ஒரே ஆகாமத்தில் அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரலாமா?
முரண்பாடு 21:
ஏவாள் படைக்கப்பட்டது எப்போது?
ஆதியாகமத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது:
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:27
இந்த வசனத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததாகவும், அப்போதே ஆணையும் பெண்னையும் - இருவரையும் - படைத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் அதே ஆதியாகமத்தின் 2:20ல் பின்வருமாறு கூறப்படுகின்றது.
அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. - ஆதியாகமம் 2:20
இந்த வசனத்தில் ஆதாம் படைக்கப்படும் வரை ஆதாமுக்கு துணையாக யாரும் படைக்கப்படவில்லை என்றும், அதன் பிறகே ஏவாள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது (மேலும் பார்க்க ஆதியாகமம் 2:21-25)
உன்மையில் ஏவாள் எப்போது படைக்கப்பட்டார்? ஒரே புத்தகத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு? உன்மையில் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தான் எழுதப்பட்டது என்றால் இப்படி முரண்பாடு வருமா?
முரண்பாடு 22:
முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா?
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27
இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்:
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19
இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?
முரண்பாடு 23:
ஆகாயத்து பறவைகள் எதன் மூலம் படைக்கப்பட்டது ?
ஆகாயத்து பறவைகள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 1ம் அதிகாரம் கூறுகின்றது:
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:20-21
ஆனால் இந்த வசனங்களுக்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2ம் அதிகாரத்தில் ஆகாயத்து பறவைகளும் இன்னும் சில உயிரினங்களையும மண்ணிலிருந்து படைத்ததாக கூறப்படுகின்றது:
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:19
ஆகாயத்து பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டதா? அல்லது மண்ணிலிருந்து படைக்கப்பட்டதா?
முரண்பாடு 24:
நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது எப்போது? பூமி படைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதன் பிறகா?
முதலில் பூமி படைக்கப்பட்டது என்றும் அதன் பிறகே நட்சத்திரங்கள் படைக்கப்பட்து என்றும் ஆதியாகமம் கூறுகின்றது :
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாமம் 1:1
இதே ஆதியாகமத்தின் மற்றொரு இடத்தில் :
தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:16-19
இந்த வசனங்களில் முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் - அதாவது பூமி படைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து நான்காம் நாளில் தான் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் இங்கே சொல்லப்படுகின்றது. ஆனால் யோபு என்ற புத்தகத்திலோ இதற்கு நேர் முரணான செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது:
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:4-7
இந்த வசனத்தில் நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரே பூமி படைக்கப்பட்டதாகவும் அச்சமயம் விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாயப்ப பாடியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆதியாகமத்தின் வசனங்களிலோ முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நான்காம் தினத்தன்றே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது? இதில் எந்த புத்தகம் சொல்வது சரியானது? முதலில் படைக்கப்பட்டது பூமியா அல்லது நட்சத்திரங்களா?
இறைவன் நாடினால் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக