புதன், 5 ஆகஸ்ட், 2009

இஸ்லாத்தின் பூமியில் கல்வி கற்கும் அமெரிக்கர்கள்


தங்களது நம்பிக்கைக்கு வலுவூட்டவும், இஸ்லாத்தைப்பற்றிய ஆழமான அறிவை பெற்றிடவேண்டும் என்ற தூய எண்ணத்தின் அடிப்படையில் இஸ்லாத்தின் மையமாக விளங்கும் சவூதி அரேபியாவிற்கு சமீபத்தில் இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க முஸ்லிம்களின் குழு ஒன்று வந்தது.

ஷாஹித் ராஷித் நியூயார்க்கை தலைமையிடமாகக்கொண்டுசெயல்படும் அல்குர் ஆன் வ சுன்னா என்ற அமைப்பின் தலைவர் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சவூதி கெஸட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் எங்கள் நம்பிக்கைக்கு வலுவூட்டவும், அறிவைத்தேடியும் இங்கே வந்துள்ளோம்"என்றார். இந்த அமைப்பின் ஏற்பாட்டில் 75க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கல்வி சுற்றுலாவாக சவூதிக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் கடந்த ஜுலை 16க்கும் ஆகஸ்ட் 3ற்குமிடையே இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவிலுள்ளவர்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடான பின்னணியைக்கொண்டவர்கள். இதில் பலர் தங்களது குடும்ப அங்கத்தினருடன் ஆர்வமுடன் சவூதிக்கு வந்துள்ளனர். இந்த பயணத்தின் சிறப்பு அம்சமாக அமெரிக்க முஸ்லிம்கள் இஸ்லாமிய விஞ்ஞானம், ஹதீஸ், ஃபிக்ஹ் மற்றும் ஆன்மீகம் ஆகியனப்பற்றிய கருத்தரங்குகளில் கலந்துக்கொண்டார்கள். மேலும் பெண்களுக்கான‌ சிறப்பு ஏற்பாடாக குர் ஆனை தஜ்வீது முறைப்படி ஓதவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தக்குழுவிற்கு கிடைத்த தனித்தன்மை மிக்க வாய்ப்பு என்னவெனில் இஸ்லாத்தைப்பற்றிய ஆழ்ந்த ஞானமுடைய 50 முஸ்லிம் அறிஞர்களை சந்தித்ததுதான். எல்லா கருத்தரங்குகளும் வரிக்குவரி அமெரிக்க ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

ராஷித் கூறுகையில்"இங்குள்ள அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்தை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக செலவிடுகின்றனர்.அவர்கள் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் மனிதநேயத்தைப்பற்றியும் மிகுந்த அக்கறைக்கொண்டுள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.

சவூதி அரேபியாவின் மூத்த மார்க்க அறிஞரான அப்துல் அஸீஸ் ஆல் ஷேஹ் தீவிரவாதம், தற்கொலைத்தாக்குதல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார். இஸ்லாம் சாந்தியும் கருணையும் மிகுந்த மார்க்கம் என்று அவர் அமெரிக்க முஸ்லிம் குழுவினரோடு உரையாற்றினார். இஸ்லாம் தீவிரவாதத்தின் எல்லாவகைகளையும் கண்டிக்கிறது என்றார் அவர்.

புனிதமிக்க மஸ்ஜிதுன்னபவியின் இமாம் ஷேஹ் அலி அப்துல்ரஹ்மான் அல் ஹுதைபி அமெரிக்க முஸ்லிம்களின் அருகில் அமர்ந்து தஜ்வீதை கற்றுக்கொடுத்தார்.அமெரிக்காவின் கொலம்பஸைச்சார்ந்த ஹம்ஸா ஜெயின்ஸ் மெக்கின்ட் கூறுகையில், "அறிஞர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு புத்துணர்ச்சியாகவும், அபூர்வமாகவும் அமைந்தது" என்கிறார்.

கிறிஸ்தவத்திலிருந்து விலகி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாகக்கொண்ட 19 வயதான இமானி கூறுகையில்,"இந்த சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அமெரிக்காவில் மஸ்ஜிதில் வைத்து பெண்கள் மத்தியில் உரை நிகழ்த்த இது எனக்கு உதவும்".என்றார்.37 வயதான அமெரிக்க முஸ்லிம் ஒருவர் குறிப்பிடுகையில்,"இரண்டு புனித மிக்க நகரங்களில் அறிவைத்தேடி வந்தது என் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் 60 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரையிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:islamonline.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக